இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      திருநெல்வேலி
nellai inspector periya paandi udalukku collector malar valaiyam vaippu

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான மூவிருந்தாளியில் நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி

ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது காவல் துறையினரிடம் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு காவல் ஆய்வாளர் உடல் விமானத்தில்  வந்து சேர்ந்தது.சென்னை விமான நிலையத்தின் 5-வது வாசல் அருகில் சிறிய மேடை அமைக்கப்பட்டு, அதில் பெரிய பாண்டியனின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 21 துப்பாக்கிகளை கையில் ஏந்தியபடி 21 போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம், சே‌ஷசாயி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்அதன்பின்னர், சென்னையில் இருந்து வியாழனன்று  மாலை 6 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.பெரிய பாண்டியன் உடலை பார்த்ததும் அவரது மனைவி மற்றும் மகன்கள் கதறி அழுதனர். அவரது உறவினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். மூவிருந்தாளி கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து பெரிய பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.பெரிய பாண்டியனின் உடலுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் உ.முத்துபாண்டியன்,வட்டார செயலாளர் பி.அசோக்ராஜ், வட்டார குழு உறுப்பினர் ஜி.கே.குமார்  மற்றும் காரல் மார்க்ஸ்,பிரபாகாரன் ,உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.இதன்பிறகு அவரது உடல் வீட்டில் இருந்து காவல் துறை அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அவரது தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வெள்ளியன்று அதிகாலை 1.30மணிக்கு  நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து