விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      விழுப்புரம்
viluppuram collector

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் கருங்காலிப்பட்டு ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   அதிகாலையில் 6.00 மணி அளவில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெங்கு கொசு ஒழிப்புப் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர் இல.சுப்பிரமணியன், அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் காணை ஊராட்சி ஒன்றியம் கருங்காலிப்பட்டு காலனி பகுதிக்கு உட்பட்ட வீடுகளில் சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா என கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், அப்பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.  மேலும், அப்பகுதியிலிருந்த துணை மின் நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க, அதன் உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன், தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) வேல்முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து