செங்கோட்டை -கோவை சிறப்பு ரயில் இயக்கம் வர்த்தகர்கள், பயணிகள் மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      திருநெல்வேலி

 செங்கோட்டையில் இருந்து-கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது வர்த்தகர்கள், ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றது.கோடை விடுமுறையை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து கோவைக்கு வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில் இயக்கம்
 

இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு கோவை       சென்றடையும் என தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் தென்காசி, செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் செங்கோட்டை – கோவை சிறப்பு ரயில் மாலை 5 மணிக்கு  செங்கோட்டையில் புறப்பட்டால் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த ரயிலில் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவே இந்த ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.இந்நிலையில் தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று (10ம் தேதி) முதல் தென்னக ரயில்வே மூலம் இயக்கப்படும்  செங்கோட்டை – கோவை சிறப்பு ரயில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக சென்று மறுநாள் காலை 5.45 மணிக்கு கோவை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி நேற்று இரவு 8 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. செங்கோட்டை-கோவை சிறப்பு ரயில் இயக்கம் வர்த்தகர்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து