ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகின்றனர் தேனியில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேச்சு

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      தேனி
periyakullam news

 தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க தேனியில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர் கழக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், பெரியகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லமுத்து, பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தலைமைகழக பேச்சாளர்கள் நடிகை பபிதா, இசைமுரசு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, நமது கழக அரசு எப்பொழுதும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், உறுதிசெய்யும் திட்டங்களையே செயல்படுத்தியுள்ளது. தேனி, மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முல்லைபெரியார் அணையில் 136 அடியாக இருந்த நீர்மட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டபோராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்த வழிவகுத்தார். அதே போல் டெல்டா பகுதி மக்களின் துயர்துடைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் போராடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவை பெற்றுத்தந்தார். கழகத்தை பொறுத்தவரையில் 11 ஆண்டுகாலம் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை கொடுத்த  கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்கு பின் கழகம் இரண்டாக பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டது. பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியில் கழகம் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது. அதேபோல் தற்போதும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளனர்.  அவர்களின் வழியில் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா கூறியதுபோது இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் கழகம் நிலைத்திருக்கும் அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது காவிரி நதிநீரின் உரிமையை தமிழகத்திற்கு பெற்று தருவதில் உறுதியாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியால் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 22 நாட்கள் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை இயங்க விடாமல் போராடினோம் என்றார்.
கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அவர்கள் பேசும்போது காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு, வளர்ச்சியோடு ஒன்றோடு ஒன்று கலந்ததாகும். காவிரி நதி எப்போது பிறந்ததோ அன்றிலிருந்து திசை மாறாமல் ஒரே சீராக இன்று வரை சுமார் 416 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட 5ம் நூற்றாண்டிலேயே கரிகால்சோழன் காவிரியில் கல்லணையை கட்டினார். 12ம் நூற்றாண்டில் மைசூர் மன்னன் காவிரியை தடுத்து அணைகட்ட நினைத்தார். அதை அப்போதைய தமிழக மன்னரால் தடுக்கப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் காவிரியில் அணை கட்ட முற்பட்டபோது சரபோகி மன்னர் மதுரைமைய ஆண்ட ராணிமங்கம்மாள் அவர்களும் இணைந்து தடுத்தனர். 1924ல் மைசூர் சமஸ்தானமும் சென்னை மாகாணமும் காவிரி பாசன பகுதிகள் எந்த வகையிலும் பாதிக்காமல் 50 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொண்டு  கர்நாடகத்தில் 41 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் கிருஷ்ணசாகராஜ அணையும். 91 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபின்  1974ல் 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி புதுப்பிக்க தவறியதால் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுத்தது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததால் டெல்டா பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் இடைக்கால நிவாரணமாக 566 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என்று கூறியது. அதனை கர்நாடக அரசு  தராததால் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 1991 டிசம்பம் மாதம் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்நாடக அரசு  காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராததை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். 4 நாட்கள் நீடித்த அந்த உண்ணாவிரதத்தால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக காவிரியில் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் காவிரிக்காக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் நலன் கருதி சட்ட போராட்டம் நடத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக 2018ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன்படி 15 ஆண்டு காலத்திற்கு  ஒரு ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. காவிரியில் அணை கட்டக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் இயங்கும். எனவே காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களை தவிர கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழக நலனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசோடு தமிழக அரசு நட்பு கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதி, சாலை வசதி, கல்வி வசதி, மின்வசதி ஆகியவை சிறப்பாக உள்ளது. 49 சதவிகித மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். அதிமுகவை உடைக்க நினைக்கின்றவர்கள் கட்சிக்கு பின்கதவு வழியாக வந்தவர்கள் தான் என்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தொகுதி கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து