ஆடி 18-ம் பெருக்கு: போடி கொட்டகுடி ஆற்றில் பெண்கள் சிறப்பு பூஜை

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      தேனி
adipruku news

போடி, ஆக. 3:     ஆடி 18-ம் பெருக்கு தினத்தை முன்னிட்டு போடி கொட்டகுடி ஆற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
     ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினம் போடி கொட்டகுடி ஆற்றில், காசிவிசுவநாதர் கோவில் பகுதியில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொட்டகுடி ஆற்றில் பெண்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.
     கொட்டகுடி ஆற்றில் காவிரி அன்னையின் உருவத்தை அமைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், தங்க நகைகள், பூ, பழம் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து பெண்கள் வழிபட்டனர். மேலும் புதுமணத் தம்பதியினர் தங்கள் தாலிக் கயிற்றினை புதுப்பித்து மாற்றிக்கொண்டனர்.
     மேலும் மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் பெண்கள் பூஜையில் வழிபட்டனர். பின்னர் பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து தயாரித்து கொண்டு வந்த உணவு பண்டங்களை மற்ற பெண்களுக்கு பரிமாறிக்கொண்டனர்.
      ஆடிப்பெருக்கு பூஜையில் போடி கொட்டகுடி ஆற்றில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதனையொட்டி போடி மற்றும் கிராம பகுதியிலிருந்து காசிவிசுவநாதர் கோவிலுக்கு ஆட்டோ மற்றும் வேன்கள் இயக்கப்பட்டன.
     பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், நகை போன்ற பொருட்களை படைத்து வழிபட்டதாலும் போடி துணை காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், காவல் ஆய்வாளர்கள் போடி நகர்  சேகர், போடி தாலுகா வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர்கள் ராஜலிங்கம், நடராஜன்,  விஜயலட்சுமி மற்றும் கூடுதல் போலீஸார் சீருடையிலும், சாதாரண உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.    
     ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை முன்னிட்டு போடி வினோபாஜி காலனி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவலிங்கப் பெருமானுக்கு மஞ்சள், திருமஞ்சன பொடி, தேன், இளநீர், பால், தயிர், விபூதி, பன்னீர், சர்க்கரை, பழங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு  அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.
     பின்னர் 108 பெண்கள் தாலி பெருக்கி மாற்றி கட்டிக் கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து