வன்கொடுமை சட்ட திருத்தம் குறித்து சுமித்ரா மகாஜன் கருத்து

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
Sumitra Mahajan 2017 7 26

புது டெல்லி, ஒரு நபருக்குக் கொடுக்கப்பட்டதை உடனடியாக யாராவது திரும்பப் பெற முயற்சித்தால், பெரும் பிரச்சினை உருவாகும் என்று வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்தம் குறித்து சுமித்ரா மகாஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்துவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைச் சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேற்குறிப்பிட்ட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், விசாரணை இல்லாமலேயே கைது செய்ய வழிவகுக்கும் அம்சத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் சார்பில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த அம்சத்தை மத்திய அரசு மீண்டும் இணைத்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை இயற்றியது. இம்மசோதா, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய வடமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட் டது. இதுகுறித்துப் பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,

அனைத்துக் கட்சிகளும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்தம் குறித்து ஒன்றிணைந்து பேச முன்வர வேண்டும். ஒருவேளை என்னுடைய மகனுக்கு ஒரு சாக்லேட்டைக் கொடுக்கிறேன். பின்னர் அது நல்லதில்லை என்று திரும்பவும் வாங்கிக் கொள்ள முயல்கிறேன். ஆனால் அவன் அதைக் கொடுக்க மாட்டான். கோபப்பட்டு அழ ஆரம்பித்து விடுவான். ஆனால் சிலரால் சிறுவனிடம் புரியவைக்க முயற்சித்து, அந்த சாக்லேட்டை வாங்கி விட முடியும்.

அதே போல ஒரு நபருக்குக் கொடுக்கப்பட்டதை உடனடியாக யாராவது திரும்பப் பெற முயற்சித்தால், பெரும் பிரச்சினை உருவாகும். அதனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தை அரசியலாக்காமல், அனைத்துக் கட்சிகளும் அதுகுறித்து ஒன்றிணைந்து பேச முன்வர வேண்டும். தற்போது நிலவும் சமூக சூழ்நிலை சரியல்ல. முற்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதே அநீதி மற்ற சமூகங்களுக்கும் இழைக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல என்று தெரிவித்தார் மகாஜன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து