பாராளுமன்றத்துக்கு 2-ம் கட்ட தேர்தல்: தமிழகம் - புதுச்சேரியில் இன்று 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு - ஓட்டுப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தமிழகம்
Parliamentary election announce 2019 03 07

சென்னை : பாராளுமன்ற தேர்தலின் 2-ம் கட்டமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார்நிலையில் வைத்துள்ளன.

97 தொகுதிகளில்...

பாராளுமன்றத்துக்கு கடந்த 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி உட்பட மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

வேலூர் தொகுதி...

வேலூர் தொகுதியில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின் பேரில் ரூ. 14 கோடி பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது போல் திரிபுராவில் நடைபெறவிருந்த ஒரு தொகுதிக்கான தேர்தல் வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரசாரம் நிறைவு...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. வேலூர் தொகுதி நீங்கலாக 39 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவுக்கு வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாகப்பட்டினத்திலும் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

பாதுகாப்பு...

பிரச்சாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு நேற்று தேர்தல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நேற்று காலை முதல் நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. 8,293 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் மட்டுமின்றி துணை ராணுவப் படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ஏற்பாடு...

வாக்குப்பதிவு சமயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்பதற்காகவும், வாக்குப்பதிவு சுமூகமாக நடத்துவதற்காகவும் அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் அதிவிரைவுப்படையினர் விரைந்து சென்று நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் மொத்தம் 5.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் மணி நேரம்...

தமிழகத்தில் மதுரை நீங்களாக 37 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மதுரை தொகுதியில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

13 மாநிலங்களில்...

தமிழகம், புதுச்சேரியுடன் மொத்தம் 13 மாநிலங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. அசாம் மாநிலத்தில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 2, காஷ்மீரில் 2, கர்நாடகாவில் 14, மராட்டியத்தில் 10, மணிப்பூரில் 1, ஒடிசாவில் 5, மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ந்டைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் சதானந்தா கவுடா, பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, நடிகை ஹேமமாலினி ஆகியோரின் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து