Idhayam Matrimony

பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை தரிசித்தனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சித்திரை திருவிழா இந்தாண்டு கடந்த 8-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 15-ம் தேதி பட்டாபிஷேகமும், 16-ம் தேதி திக்விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 17-ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டமும் நடந்தது. பின்னர் நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதற்கிடையே வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து தங்கப்பல்லக்கில் 17-ம் தேதி மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி வந்த கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்நதல் வழியாக நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மூன்றுமாவடியை அடைந்தார்.  அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர்.

எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ் ரோடு, அவுட்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்த அழகர் திருமஞ்சனமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன் பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். நேற்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னதாகவே வைகை ஆற்றுக்கு வீரராகவ பெருமாள் வந்து அவரை வரவேற்றார். ஆற்றில் இறங்கிய கள்ளழகர் காலை 7.25 மணி வரை அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். வைகையாற்றில் கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர். 

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 
இதையடுத்து வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், நேற்று பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு அழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடந்தது. அங்கிருந்து புறப்படும் அழகர் இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து