என் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      விளையாட்டு
shane watson 2019 04 24

சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

175 ரன்கள்...

சென்னை-ஐதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்தார்.

96 ரன்கள் குவிப்பு...

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டுபிளிஸிஸ் களமிறங்கினர். டுபிளிஸிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம், ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடினார். அவர் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். 19.5-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக...

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வாட்சன் முதல் 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடியிருந்தார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல குரல்கள் எழுந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார் ஷேன் வாட்சன். 96 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டோனிக்கு நன்றி...

போட்டிக்கு பிறகு பேசிய ஷேன் வாட்சன், ‘நான் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாதது எனக்கே புரிந்தது. இந்நேரம் நான் மற்ற அணிகளில் இருந்திருந்தால் கண்டிப்பாக என்னை நீக்கிருப்பார்கள். ஆனால் கேப்டன் டோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளமிங் என்மீது நம்பிக்கை வைத்தார்கள். அதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து