நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      இந்தியா
bank strike 2019 09 21

நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. 

மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து 4 வங்கிகளாக சமீபத்தில் குறைத்தது. இதனால் 6 முக்கியமான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்படுகின்றன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 22-ந்தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இது தொடர்பாக அந்த தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவு மிகுந்த துரதிர்‌‌ஷ்டவசமானதும், தேவையற்றதும் ஆகும். தற்போது மூடுவிழாவை எதிர்நோக்கி இருக்கும் ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட 6 வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றியும் வருகின்றன. இந்த வங்கிகளின் பின்னே நீண்ட வரலாறு உண்டு. நீண்டகால போராட்டத்தின் பலனாகவே அவை இந்த வளர்ச்சியை பெற்றுள்ளன.

ஜன்தன் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடிமகனும் வங்கி கணக்குகள் வைத்திருக்க வேண்டும் என ஒருபுறம் கூறிவரும் மத்திய அரசு, மறுபுறம் வங்கி இணைப்பு என்ற பெயரில் வங்கிகளை மூடிவருவது முரணாக உள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமான முடிவு ஆகும். ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கிகள் இணைக்கப்பட்டதன் மூலம் எந்தவொரு நேர்மறையான விளைவுகளும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை. தற்போதைய பொருளாதார மந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும் நிலையில், அவற்றை இணைக்கும் பரிசோதனை முயற்சிகள் தேவையற்றவை. இவ்வாறு தொழிற்சங்கங்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து