திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகன் ஆலயங்களில் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      ஆன்மிகம்
kanda-shasti-tiruchendhur 2019 11 01

மதுரை : முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை உள்பட தமிழகம் முழுவதும் அமைந்துள்ள கோவில்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி முருகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கந்தசஷ்டி விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள், விடுதிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலையில் ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.  

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் சென்று, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

7-ம் திருநாளான நாளை  (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

8-ம் நாளான 4-ம் தேதி (திங்கட்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறும். 9-ம் நாளான 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ம் நாளான 7-ம்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 12-ம் நாளான 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள். விழாவை முன்னிட்டு, கோவில் கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். இதே போல் தமிழகம் முழுவதும் முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்வர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து