முதலாவது டி - 20 போட்டியில் இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்ற வங்காளதேச அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி வாழ்த்து

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      விளையாட்டு
ganguly 2019 11 04

மும்பை : புதுடெல்லியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி - 20 போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி -20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில்  முதலாவது டி - 20 போட்டி நடந்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

டெல்லியில் கடும் காற்று மாசு, புகைமூட்டம் ஆகியவை நிலவியதால் போட்டி நடத்துவதே பெரும் சவாலாக இருந்தது. காலை நேரத்தில் இருந்த புகை, காற்று மாசு ஆகியவற்றைப் பார்த்து மாலையில் போட்டி நடத்துவது சந்தேகம் என்று கூறப்பட்டது. ஆனால், மாலையில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்து போட்டியை உற்சாகமாகப் பார்த்து ரசித்தனர்.

வங்கதேச அணியின் வெற்றி குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு, இரு அணிகளும் இந்த சூழலில் விளையாடியதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். வங்கதேசப் புலிகள் மிகுந்த கடினமான சூழலில் ஆட்டத்தை எதிர்கொண்டார்கள். வெல்டன் பங்களாதேஷ் எனப் பாராட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி - 20 தொடரில் வங்கதேசம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து