நட்கர்னி மறைவுக்கு இரங்கல்: கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் - காயம் காரணமாக வெளியேறினார் தவான்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      விளையாட்டு
Dhawan 2020 01 19

பெங்களூர் : பெங்களூருவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து களமிறங்கினர்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பாபு நட்கர்னி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணியின் முன்னாள் வீரர் பாபு நட்கர்னி, இடதுகை பேட்ஸ்மேன், சுழற்பந்துவீச்சாளராவார். இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,414 ரன்களும், 88 விக்கெட்டுகளையும் நட்கர்னி வீழ்த்தியுள்ளார். மும்பையைச் சேர்ந்த நட்கர்னி 191 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளையும், 8,880 ரன்களும் சேர்த்துள்ளார். கடந்த 1955-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நட்கர்னி, தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்துக்கு எதிராகவே விளையாடினார். ஏ.கே. பட்டோடி தலைமையில் கடந்த கடைசியாக கடந் 1968-ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நடந்து வரும் 3-வது ஒருநாள் போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக ஷிகர் தவான் தொடக்கத்திலேயே வெளியேறினார். 5-வது ஓவரில் ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் அடித்த ஷாட்டை தாவிப் பிடித்து பீல்டிங் செய்ய தவான் முயன்ற போது அவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவி அளிக்கப்பட்டும் வலி குறையாததால், அவர் பெவிலியன் திரும்பினார்.ஏற்கனவே கடந்த 2-வது போட்டியின் கம்மின்ஸ் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் மார்பு விலா எலும்பில் அடிவாங்கியிருந்தார் தவான் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து