முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பாவிட்டால் பதிலடி கொடுப்போம் : இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் அதிபர் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் அவ்வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்தது. இதனால் டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். ஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து