ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020      ஆன்மிகம்
Tirumala 2020 04 28

ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தினமும் 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட ஊரடங்கையொட்டி திருப்பதி கோவில் கடந்த மார்ச் 21-ம் தேதி மூடப்பட்டது. மலைப் பாதைகளை மார்ச் 18-ம் தேதி முதல் மூடியது. ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து விதமான பூஜைகளும் எவ்வித குறைபாடும் இன்றி நடந்து வருகிறது. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் தேவஸ்தானமும் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதியளிக்கும் தேதியை நீட்டித்துள்ளது. மார்ச் 13-ம் தேதி முதல் மே 31-ம்  தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இதர தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்து பக்தர்களுக்கு அதற்கான கட்டணத்தை திருப்பி அளித்து வருகிறது.

மே 3-ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தேவஸ்தானம் மே 31-ம் தேதி வரை அனைத்து தரிசனங்களையும் ரத்து செய்துள்ளது. ஊரடங்கு திரும்ப பெறப்பட்டாலும் ஏழுமலையான் தரிசனத்தில் சில புதிய முறைகளை கையாள தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தினமும் 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. பக்தர்களுக்கு திருமலையில் வாடகை அறை அளிப்பதை ஊரடங்கிற்கு பின்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது. தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக 3 அடி தூரம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட உள்ளது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவதால் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து