முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அ.தி.மு.க. அரசு: எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரை போல தொடர் வெற்றி பெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம் : தொண்டர்களுக்கு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இன்று 5-ம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு அடியெடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரை போல தொடர் வெற்றி பெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

நம் இதயத்தில் என்றும் வாழும் பாசமிகு தாய் அம்மா, தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின், நான்காம் ஆண்டு நிறைவுற்று 23.5.2020-ல் ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது. அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனையைப் போல, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் அரசாக, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தன்னந்தனியாக களம் கண்டு, தொடர் வெற்றி மூலம் மீண்டும் அ.தி.மு.க. அரசை அமைத்த மகத்தான சாதனையாளர் நம் அம்மா.   

பற்றற்ற துறவியின் உள்ளத்தோடும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மக்கள் தொண்டின் இலக்கணத்தை இதயத்தில் சுமந்தவாறும், தமது வாழ்வின் இறுதி மூச்சு வரை தலைமைப் பண்புகளின் சிகரமாகவும், தாய்மை உள்ளத்தின் வடிவமாகவும் வாழ்ந்து மறைந்தவர் நம் அம்மா. தன் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதை உணர்ந்த நிலையிலும் கண் துஞ்சாது கடமையாற்றி, ஓய்வறியாது உழைத்து, தமிழ் நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்களின் பேரன்பைப் பெற்று, அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார் நம் அம்மா. 

தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்குத் தொண்டாற்றும்; ஆயிரம் தலைமுறை செழிக்க வந்த பேரியக்கம் அ.தி.மு.க. என்பதை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சூளுரையாகவும், தீர்க்கத்தரிசனமாகவும் அம்மா முழங்கியது நம் செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  

கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்பவும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளின்படியும் ஏழை, எளியோர், உழைக்கும் மக்கள், தாய்மார்கள் நலன் காத்திட எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் ஆட்சியில் தமிழகம் கண்டது. துறைதோறும் சாதனைகள், நாட்டிற்கே வழிகாட்டும் மக்கள் நலப் பணிகள், மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் அயராத போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுகின்ற இன உணர்வு என்பனவெல்லாம் அம்மாவின் வரலாற்றுச் சாதனைகள்.

மங்காத புகழோடும், முதல்வர் என்ற சிறப்போடும் அம்மா  மறைந்த பிறகு அ.தி.மு.க.வும், அவர் அமைத்துத் தந்த அரசும் தமிழ் நாட்டு மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் தொடர்ந்து நற்பணி ஆற்றி வருவது நம் அனைவருக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களின் ஒத்துழைப்பாலும், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவாலும், அ.தி.மு.க.வையும், கழக அரசையும் அம்மாவின் பூரண நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம்.  அம்மாவின் வழியில் நாம் செயல்படுகிறோம்.  

அதன் விளைவாக, மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ் நாடு முதலிடம். ரூபாய் 11,250 கோடியில் காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க `நடந்தாய் வாழி காவேரி’ திட்டம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை நாட்டிலேயே திறம்பட செயல்படுத்திய மாநிலம் என்று மத்திய அரசு, அம்மாவின் அரசைப் பாராட்டியது. வேளாண்மை உற்பத்தியில் அம்மாவின் அரசு, மத்திய அரசு வேளாண் துறையின் `கிருஷி கர்மான்’ விருதினை தொடர்ந்து 5 முறை பெற்றுள்ளது.  உள்ளாட்சி நிர்வாகப் பணிகளில் அம்மாவின் அரசு, திறம்பட செயல்பட்டு மத்திய அரசின் பாராட்டினைப் பெற்றிருக்கிறது. 

கிராமப்புற தூய்மையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக அம்மாவின் அரசு, பாரதப் பிரதமரிடம் இருந்து விருதினைப் பெற்றிருக்கிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த செயல்பாடு காரணமாக மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்றிருக்கிறது.

முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மூலம் 8,835 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு. துணை முதல்வர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் மூலம், தமிழ் நாட்டில் குறைந்த செலவில் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தில் G.S.A. என்ற அமெரிக்க நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 750 கோடி ரூபாய்) முதலீடு செய்யவும், தமிழ் நாடு வீட்டு வசதித் துறைக்கென 5,000/- கோடி ரூபாய் கடன் உதவியை உலக வங்கி அளித்திடவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.   பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, காவேரி டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டு தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் காப்பாற்றப்பட்டுள்ளது. 

அம்மா மேற்கொண்ட பெருமுயற்சிகளின் காரணமாக, இப்பொழுது கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல், பெருந்துறையில் செயல்பட்டு வந்த IRT மருத்துவக் கல்லூரியானது அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அம்மா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசால், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் முயற்சியில், தமிழ் நாட்டில் புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை கூறும் ஜல்லிக்கட்டு, அம்மாவின் அரசு மேற்கொண்ட அயரா முயற்சியின் காரணமாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தடையின்றி நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காவிரி - கோதாவரி நதிகளை இணைப்பதன் மூலம் தமிழ் நாட்டிற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் பெற்று அதனை தென் தமிழகத்திற்கும் கொண்டு செல்ல முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் 5,11,866 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தகுதியானவைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்திக்கடவு-அவினாசி நீர்ப் பாசனத் திட்டம்; மேட்டூர் அணையில் இருந்து சரபங்கா ஆற்றுக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உலக முதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் முதலீடு செய்யத் தூண்டும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3,00,431 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2.05 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுப் பொருட்களுடன் 1,000/- ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டிருக்கிறது. மகளிர் பாதுகாப்பிற்கு ``காவலன் செயலி’’ அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைத் தொழிலாளர்கள் சுமார் 80 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான மருத்துவப் பணிகளில் அம்மாவின் அரசு முழு மூச்சாக இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் சமைத்த, சத்தான உணவு, ரேஷன் அட்டை உள்ள குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை, இரண்டு முறை கூடுதலாக அரிசி, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா 2,000/- ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், வாரியங்களில் உறுப்பினர்கள் அல்லாத தொழிலாளர்களுக்கும் தலா 2,000/- ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.   பெரும் புயல்கள், வெள்ளம், வறட்சி என்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் மக்களின் துயர் துடைத்து, மறுவாழ்வு அளிக்க நாம் அயராது உழைத்தோம். தமிழ் நாடு முழுவதும் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க.வினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பணிகள் எல்லாம், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு சில எடுத்துக்காட்டுகளேயாகும்.  இன்னும் பட்டியலிட அம்மா அரசின் சாதனைகள் ஏராளமாக அணிவகுத்து நிற்கின்றன.   நாம் செய்திட்ட பணிகள் ஏராளம்.  இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அம்மாவின் அரசு தமிழ் நாட்டு உரிமைகளைக் காப்பதிலும், தமிழ் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அம்மாவின் வழியிலேயே திறம்பட செயலாற்றும் என்பதை நாங்கள் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். 

அம்மா குறிப்பிட்டதைப் போல, அ.தி.மு.க. என்னும் ஆலமரம் ஆயிரங்காலத்துப் பயிராக செழித்து ஓங்கும். மக்கள் அனைவரும் இளைப்பாறும் வண்ணம் `பழுத்த பயன் மரமாகவும், நீர் நிறைந்த ஊருணியாகவும் அ.தி.மு.க. என்னும் தியாகச் சுடர் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.  தமிழ் நாட்டு மக்கள், அ.தி.மு.க. அரசை தங்களின் நலன் காக்கும் அரசாக போற்றுகின்றனர். எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் காட்டிய பாதையில் நடைபெறும் அ.தி.மு.க அரசே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்திட வேண்டும் என்று விரும்புகின்றனர்.   

நம் இருபெரும் தலைவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்றி, கட்சிக்கும், அரசுக்கும் புகழ் சேர்ப்போம்.  எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரைப் போல தொடர் வெற்றிபெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம்.    நேற்றும், இன்றும், நாளையும் அ.தி.மு.க.அரசே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்திட அயராது உழைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து