எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாக். பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Pakistan 2020 08 02

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான், இருவர் காயமடைந்தனர்.

காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்த தாக்குதல் சம்பவங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழையும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ண ஹாதி செக்டாரின் எல்லை வழியாக நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் குழுவாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர்.  அப்போது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பாதுகாப்பு படைவீரர்கள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். 

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டான். 2 பயங்கரவாதிகள் படுகாயங்களுடன் தப்பிச்சென்றனர்.  இதையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து