முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      தமிழகம்
CM-1 2025-11-02

Source: provided

சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12 மாநிலங்களில்...

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 20 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. பீகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நாளை (நவ. 4) முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆலோசனை கூட்டம்... 

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ஏற்க இயலாதது...

தீர்மானத்தில், பீகார் மாநில எஸ்.ஐ.ஆர். வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், குறிப்பாக அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாதது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இந்த எஸ்.ஐ.ஆர்.-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தேர்தல் ஆணையம்...

நமது அச்சத்துக்கு மிக முக்கியமான காரணம், பீகார் மாநிலத்தில் நடைபெற்றவை ஆகும். சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு பீகார் மாநிலத்தில் இந்த நடவடிக்கையானது நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்தப் பதிலையும் மக்கள் மன்றத்துக்கோ, சுப்ரீம் கோர்ட்டுக்கோ இந்தியத் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. மத்திய பா.ஜ.க.,வின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

12 மாநிலங்களில்... 

பீகாரில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 169-இன்படி ஒன்றிய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் எஸ்.ஐ.ஆர். செய்யப்பட வேண்டும். அந்த முறையைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது.

சட்டவிரோதமாகும்...

இப்போது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். அறிவிப்பே சட்டவிரோதமாகும். ஆதார் அட்டையை 12-ஆவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 27.10.2025 அறிவிப்பில் தெளிவற்ற முறையில் ஆதார் பற்றி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சரிபார்ப்பில் நேர்மைத்தன்மை இல்லை; வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. “ஆதார் சில நிபந்தனைகளுடன் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்பதே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடாக உள்ளது.

குழப்பமாக உள்ளது...

அதே அறிவிப்பின் இணைப்பு-III-இல் “வாக்காளர் பிறந்த தேதி தொடர்புடைய ஆவணங்களை வாக்குப் பதிவு அதிகாரிக்கு அவர் கேட்கும் போது கொடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்போது கேட்பார்கள்? தரப்படும் நோட்டீஸ் எந்த படிவத்தில் யார் தருவார்? எந்த படிவத்தில் ஆவணங்கள் தரப்பட வேண்டும்? ஆவணத்தைச் சமர்ப்பிக்க எவ்வளவு நாட்கள் தரப்படும்? யாரிடம் தர வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடையில்லை. இது தேர்தல் ஆணையம் ஏற்படுத்தும் குழப்பத்தைக் காட்டுகிறது.

அதிக சந்தேகத்தை...

இப்படி குழப்பி, உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது என்றே தெரிகிறது. ஒரு வாக்காளர் ஆவணம் வழங்க வேண்டுமா வேண்டாமா, யாரிடம் வழங்குவது என்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கும் உரிய பதில்களும் - விளக்கங்களும் இல்லை. இந்தக் குழப்பமானது தகுதிபெற்ற வாக்காளர்களை நீக்கவே பயன்படும். தேர்தல் ஆணையத்தின் அவசரமே நமக்கு அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.

பருவமழை காலம்...

கணக்கெடுப்பு காலம் என நிச்சயிக்கப்பட்டுள்ள 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலான காலம் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலம் ஆகும். இந்த காலத்தில் கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக - விவசாயிகளாக இருப்பதால், கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற நியாயமான அச்சம் உள்ளது.

வாக்குரிமையை... 

வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும் . எனவே, இந்த காலம் கணக்கெடுப்புக்கு உகந்த காலம் இல்லை என்று இக்கூட்டம் கருதுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் திருநாள் ஆகியவை இருக்கிறது. இதனால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று இக்கூட்டம் தனது அச்சத்தைப் பதிவு செய்ய விரும்புகிறது.

அதிகாரத்தை வழங்கி... 

வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியம்; நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது. அரசியல் சட்டமும் - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் தேர்தல் ஆணையத்திற்கு இதற்காகவே அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. நடுநிலைமையுடன், பாரபட்சமின்றி எந்த அரசியல் கட்சிக்கும் துணை போகாமல் சுதந்திரமான அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமகளத்தை  ஏற்படுத்திக் கொடுக்கும் மிக முக்கியமான கடமையைத் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் சட்டம் ஒப்படைத்துள்ளது.

ஒரு கட்சி சார்பாக... 

ஆனால் பொறுப்புள்ள கடமையை நிறைவேற்ற வேண்டிய தேர்தல் ஆணையமே மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் சார்பாக நின்று செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள எஸ்.ஐ.ஆர். வழக்கில் இறுதித்தீர்ப்பு வராத நிலையில், தனது 27-10-2025 அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமான, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு எதிரான செயலாகும். எனவே இந்த எஸ்.ஐ.ஆர். ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஆகவே இந்த எஸ்.ஐ.ஆர். சீராய்வை தேர்தல் ஆணையம் இப்போது கைவிடும்படி அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கிறது.

தேர்தலுக்குப் பின்பு..

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்.-ஐ நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இந்தக் கருத்துகளை ஏற்காததால், தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது எனவும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து