முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்த ஊழியர்கள்: சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த பரிதாபம்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

அகர்தலா : திரிபுராவில் குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்ததுடன், அங்கு சிகிச்சை எதுவும் அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுராவில் குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்ததுடன், அங்கு சிகிச்சை எதுவும் அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அபிக்‌ஷா தாஸ் என்ற இளம்பெண் டாக்டர், லண்டனில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் அவர் சொந்த ஊரில் உள்ளார்.

இவரது பாட்டியான பினாபானி ராய் (வயது 82), கடந்த 31-ம் தேதி வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். மயக்க நிலையில் இருந்த அவரை அபிக்‌ஷா தாஸ் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள ஐ.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

தற்போதைய கொரோனா நடைமுறையின்படி, அங்கு சென்ற உடனே மூதாட்டிக்கு துரித பரிசோதனை கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 5 நிமிடத்தில் முடிவை அறிவித்த டாக்டர்கள், மூதாட்டிக்கு கொரோனா என்று கூறினர். இதனால் அவர் உடனடியாக அகர்தலா மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கொரோனா நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைப்பிரிவில் மூதாட்டியை அனுமதித்தனர். எனினும் கொரோனாவை காரணம் காட்டி மூதாட்டிக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி மூதாட்டிக்கு கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையும் மேற்கொள்ளவில்லை.

பின்னர் அபிக்‌ஷா தாசின் வற்புறுத்தலின் பேரில் 2 நாட்களுக்குப்பின் சளி மாதிரி எடுக்கப்பட்டது.  எந்தவித சிகிச்சையும் கிடைக்காத மூதாட்டியை அபிக்‌ஷா தாசும், அவரது டாக்டர் சகோதரி ஒருவரும் சேர்ந்து பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து தினமும் 12 மணி நேரம் வைத்து மாறி மாறி அவசர சிகிச்சைப்பிரிவில் பார்த்துக் கொண்டனர்.

சிகிச்சை எதுவும் அளிக்கப்படாததால் ஆஸ்பத்திரியில் சேர்த்த 3-வது நாளில் மூதாட்டி மரணமடைந்தார். கொரோனாவால் இறப்போரின் உடலை தனியாக தகனம் செய்வது போல, மூதாட்டியின் உடலும் தனியாக தகனம் செய்யப்பட்டது. 

மறுநாள் மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த தகவல்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள டாக்டர் அபிக்‌ஷா தாஸ், தனது பாட்டிக்கு இல்லாத கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்காதது குறித்து வேதனை வெளியிட்டு இருந்தார்.

இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், மாநில சுகாதாரத்துறைக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விவகாரம் மாநில அரசியலிலும் புயலை கிளப்பி உள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 42 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களில் எத்தனை பேர் இதுபோன்று தவறாக கணித்தலால் இறந்தனர்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. மேலும் அந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து