புலியை பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் பூனை: ஆன்லைன் மூலம் தி.மு.க.வில் டிரம்ப் உறுப்பினராகி விட்டாராம்: வலைதளங்களில் வைரலாகும் அடையாள அட்டை

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      தமிழகம்
Trump-DMK 2020 09 21

Source: provided

திருமங்கலம் : ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இணைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள உறுப்பினர் அடையாள அட்டை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் முன்னணியில் உள்ள அ.தி.மு.க ஒவ்வொரு கிராமங்களிலும் நகரங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி சார்பு அணிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தங்களது பங்கிற்கும் பல்வேறு யுக்திகள் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றன.

இந்நிலையில் தனியார் வியூக நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தி.மு.க ஆன்-லைன் முறையில் உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளை துவங்கியுள்ளது.

அதற்காக இணைதள முகவரியை வெளியிட்டுள்ள தி.மு.க மேலிடம் அதில் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு ஓ.டி.பி. எனும் குறியீட்டினை அனுப்பி அதில் ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இணையம் வழியாக உறுப்பினர் அடையாள அட்டையினை வழங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் பலர் தி.மு.க.வில் உறுப்பினராகி வருகின்றனர் என அக்கட்சியின் மேலிடம் கூறி வருகிறது. 

இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக இணைந்திருப்பதாகவும், அதற்கு சான்றாக அமெரிக்க அதிபரின் படம் கொண்ட இணையவழி தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அடையாள அட்டையில் டொனால்டு டிரம்ப், தகப்பனார் பெயர் ப்ரெட்டிரம்ப், வயது74, உறுப்பினராக சேர்ந்த நாள்; 19.09.2020 என்றும் அவர் சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் இருப்பதாகவும், அவரது உறுப்பினர் அட்டைஎண். DMKOMCH 0161464069 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் முறையில் தி.மு.க.வில் இணைந்திருப்பதாக வெளியான இணையவழி அடையாள அட்டை பெரும் வைரலாகி தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு இணையவழி உறுப்பினர் சேர்க்கை பலனளிக்காமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் தி.மு.க மேலிடம் அப்செட் ஆகியுள்ளது.

சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அடையாள அட்டை பதிவுகள் மூலமாக ஆன்-லைன் முறையில் ஏராளமானேர் போலியாக தி.மு.க உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் வலைத்தள பயனாளர்கள் என்னதான் அமெரிக்க அதிபராக இருந்தாலும் உதயநிதி ஒப்புதல் இல்லாமல் பதவி கிடைக்காது.

அடுத்த தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு அமெரிக்க அதிபரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், போலி உறுப்பினர் அடையாள அட்டை வெளியான நிகழ்வு குறித்து சி.ஐ.ஏ விசாரணை நடத்திட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர். இது போன்ற காமெடி கலாட்டா நிகழ்வுகளால் தி.மு.க ஐ.டி.விங் நிர்வாகிகளும்,கட்சித் தொண்டர்களும் கலங்கி நிற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து