தேசிய சித்தா நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
CM-Photo 2020 09 24

தேசிய சித்தா நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

சித்தா, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, மற்றும் ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைக்கு உங்கள் தலைமையிலான இந்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அகில இந்திய சித்தா நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது குறித்த  இந்திய அரசின் முயற்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அத்துடன் நடப்பு நிதியாண்டில் அகில இந்திய சித்தா நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சித்த மருத்துவ முறை தோன்றிய இடமான இந்த முன்னோடி நிறுவனத்தை தமிழ்நாட்டில் நிறுவுவது பொருத்தமாக இருக்கும். விமானம், ரயில் மற்றும் சாலை இணைப்புடன் இந்த நிறுவனத்திற்குத் தேவையான நிலம் ஏற்கனவே சென்னை நகரத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இதுதொடர்பாக, இந்திய அரசுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்.  அகில இந்திய சித்தா நிறுவனம் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருப்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், அதற்கு சாதகமான தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து