நிவர் புயல் தாக்கியதில் தமிழகத்தில் 3 பேர் பலி

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
Nivar-storm-tamilnadu 2020

நிவர் புயல் தாக்கியதில் தமிழகத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானது. நிவர் என பெயரிடப்பட்ட இந்த புயல் வலுப்பெற்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நிவர் புயல் நேற்று முன் தினம் மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதிதீவிர புயலாக மாறிய பின்னர் மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. 

அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. 

இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது. ஆனால் அதன்பிறகு புயலின் நகர்வில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன்பின்னர் இரவு 10.45 மணிக்கு அதிதீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. 

அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது. அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இந்த புயலால் தொடர் கனமழை ஏற்பட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கியுள்ளது. 

இதேபோன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுச்சேரி மற்றும் மரக்காணம் பகுதிகளுக்கு இடையே புயல் கடந்தபொழுதும், தமிழகத்திலும் நிவர் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. 

இதுபற்றி தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயம் அடைந்து உள்ளனர். 

இதேபோன்று புயலால் 101 குடிசைகள் சேதமடைந்து உள்ளன. 380 மரங்கள் சாய்ந்துள்ளன. அத்தியாவசிய பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து