மதுரை : மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முதல்வருக்கு வெற்றிவேலை நினைவு பரிசாக வழங்கினார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் மதுரை வந்தார். மதுரை புறநகர் எல்லையான அலங்காநல்லூர் தனிச்சியம் பிரிவு விலக்கில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பூங்கொத்து மற்றும் வரலாற்று புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். ஏராளமான பெண்கள் நள்ளிரவிலும் முளைப்பாரி எடுத்து முதல்வரை வரவேற்றனர். மேலும் கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நடன நிகழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மதுரை மாநகர் எல்லையான பரவை வந்தார். அங்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமையில் முதல்வருக்கு அ.தி.மு.க. வினர் திரண்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதன் பின்னர் செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம் வழியாக சின்ன சொக்கிகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகைக்கு சென்று முதல்வர் நேற்று முன்தினம் இரவு தங்கினார். பின்னர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம், தமுக்கம் மைதானம் வழியாக விழா நடைபெறும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றார். செல்லும் வழியில் அ.தி.மு.க. வினர் சாலைகளின் இருபுறமும் திரண்டு முதல்வரை வரவேற்றனர். தமுக்கம் மைதானம் முன்பு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஏற்பாட்டில் முல்லை பெரியாறு அணையின் மாதிரி தோற்றத்துடன் அங்கிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் மாதிரி தோற்றத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விட்டு இறங்கி வந்து பார்வையிட்டு வியந்து பாராட்டினார். அமைச்சர் செல்லூர் கே. ராஜூவின் இந்த ஏற்பாட்டையும் முதல்வர் பெரிதும் பாராட்டினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விழா மேடையை அடைந்தார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த விழா முடிவுக்கு பின் அவர் கார் மூலம் சிவகங்கைக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் விரகனூர் சந்திப்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பளித்தனர். அப்போது முதல்வருக்கு வெற்றிவேலை வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நினைவுப்பரிசாக வழங்கினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் நிலையூர் முருகன், தக்கார் பாண்டி, மாவட்ட அவை தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், இளைஞரணி செல்வகுமார், மாவட்ட பொருளாளர் அம்பலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.