மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகத்தான சாதனைகள் - திட்டங்கள்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Jayalalithaa-2021-02-23

Source: provided

மதுரை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகத்தான சாதனைகளையும் அவரது வாழ்க்கைப் பாதையையும் இங்கே பார்ப்போம்.

பிறப்பு: 24 பிப்ரவரி 1948 

பிறந்த இடம்: மைசூர்

ஆரம்ப வாழ்க்கை: 

‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமளவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூரில்  பிறந்தார். 

ஜெயலலிதா குடும்பம் அரச மைசூர் வம்சாவளியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமரா ஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். 

ஜெயலலிதா தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், 

அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார். 

சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். 

தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதர், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் காலம் அவருக்கென்று வேறு திட்டங்களை வைத்திருந்தது. 

குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது. 

தொழில்: 

ஷங்கர்.வி.கிரி; இயக்கிய ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 

1964-ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். 

பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார். 

1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். 

ஜெயலலிதாவின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. 

ஒரு வருடத்திற்குப்பிள்ளர் அவர் ‘வெண்ணிற ஆடை’ என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் நடிப்பைத்துறையை ஆரம்பித்தார்.. அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் பிரவேசித்தார். இதனைத்தொடர்ந்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். 

அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று. பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. 

திரையுலகின் பிற்பகுதியில் அவர் முன்னனி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968-ல், அவர் தர்மேந்திரா நடித்த ‘இஜத்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். 

அரசியலில் பிரவேசிக்கும் முன்னர் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவாக அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980-ல் வெளியான ‘நதியை தேடி வந்த கடல்’ இருந்தது. 

அதே ஆண்டில், அ.இ.அ.தி.மு.க நிறுவனரான எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர் அவர் தீவிரமாக அ.இ.அ.தி.மு.க. அரசியல் கட்சி உறுப்பினராக செயல்பட்டார்.  

இதுவே ஜெயலலிதாவை அ.இ.அ.தி.மு.க கட்சியின் எதிர்கால வாரிசாக்கியது, எம்.ஜி.ஆர். முதவமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். 

அவரது மரணத்திற்கு பின், அவரது துணைவியார் ஜானகி அம்மாளை அ.தி.மு.க.வின் எதிர்கால தலைவராக்க சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி அம்மாள் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும் செயல்பட ஆரம்பித்தது. 

1989-ல் அ.தி.மு.க. கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. 

அவர் 4 முறை (1991, 2001, 2011.2016) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். 

பங்களிப்புகள்: 

அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. 

ஜெயலலிதா பெற்ற விருதுகள் 

‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான ‘பிலிம்பேர் விருதினை’ பெற்றுத் தந்தது. 

சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது. 

‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது. 

தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. 

சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார். 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது. 

‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது. 

பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது. 

சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது. 

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க.வின் சாதனைகள் :– 

1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. 

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 

2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. 

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். 

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க.வெற்றிபெற்றது. 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., 37-ல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது. 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227-ல் நேரடியாகவும், 7-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-ல் தான். 

மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 50 ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. 

அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவிலேயே தனது மாநில மக்களின் நலனுக்காக சிறப்பு மற்றும் இலவச திட்டங்கள் அறிவிப்பதில் முதன்மையானவர் ஜெயலலிதா. 

இவர் அறிவித்த பெறும்பாலான திட்டங்கள், இலவச திட்டங்களாகவோ அல்லது அதிக மானியம் கொண்ட திட்டங்களாகவோ இருந்துள்ளது. இலவச திட்டங்கள் என்று அழைப்பதை விரும்பாதவர் ஜெயலலிதா, இதனால் அனைத்து இலவச திட்டங்களையும் விலையில்லா திட்டங்கள் என்று அவர் கூறுவது வழக்கம். 

பெண்களுக்கு முக்கியத்துவம் 

தமிழகத்தின் முதல்வராகச் செல்வி ஜெயலலிதாவின் 20 வருடங்களுக்கும் அதிகமான ஆட்சிக்காலத்தில் பெண்களுக்காக, பெண்களை மையப்படுத்திப் பல நல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

மேலும் இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகத் திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததும் இவர் தான். 

தொட்டில் குழந்தை திட்டம் 

1991-ம் ஆண்டுத் தொட்டில் குழந்தை திட்டம் ஜெயலலிதா பதவிக்கு வந்த உடன் முதன்முதலாக அறிவித்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். 

இத்திட்டத்தின் கீழ் குழந்தையை வளர்க்க முடியாதோர் தங்களது கைக்குழந்தையை அரசு தொட்டிலில் போட்டுவிட்டால், இக்குழந்தைகளை அரசு பொறுப்பேற்றுக் கவணித்துக்கொள்ளும். மேலும் இக்குழந்தைகளைத் தத்துக்கொடுக்கவும் அரசுக்கு உரிமை உண்டு என்பதுதான் இத்திட்டம். 

தாலிக்கு தங்கம்..! 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் 2011-ம் ஆண்டுத் திருமணத்திற்குத் தங்கம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இத்திட்டம் பிரபல சமுகச் சேவையாளர் மூவலூர் ராமாமிர்தம் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அம்மா உணவகம் 

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் மலிவான விலையில் தரமான முறையில் மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று திட்டமிட்ட ஜெயலலிதா அம்மா உணவகத்தை உருவாக்கினார். 

இப்புதிய திட்டத்தின் மூலம் 1 ரூபாய்க்கு இட்லி முதல் அதிகப்படியாக 10 ரூபாய்க்கு பல உணவுகளைச் சாமானியர்களின் வயிறுநிரம்பச் சாப்பிடும் அளவிற்கு உணவளிக்கும் திட்டத்தை வடிவமைத்து, திறம்படச் செயல்படுத்தியுள்ளார். 

இதன் மூலம் பெரு நகரங்களில் மிகவும் குறைவான வருமானம் கொண்ட மக்கள் தினமும் போதுமான அளவிற்கு உணவு பெறுகின்றனர். 

அம்மா லேப்டாப் 

தமிழக அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ மாணவிகளுக்குத் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், தொழில்நுட்ப கல்வியறிவை சிறப்பான முறையில் பெறவும் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது 

அம்மா குடிநீர் 

தமிழ்நாட்டில் பாட்டில் தண்ணீர் 20-25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு மானிய விலையில் பஸ்நிலையம், ரயில் நிலையம் என மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் வெறும் 10 ரூபாய்க்குத் தண்ணீர் பாட்டில்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துத் தற்போது சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 

அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள் 

தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம் என்னும் திட்டங்களைத் தாண்டி தமிழக மக்களின் மனதில் நீக்கா இடம்பிடித்திருந்தது அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள் திட்டம் என்று தான் சொல்ல வேண்டும். 

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1000 ரூபாய் மதிப்புள்ள 16 குழந்தை பராமரிப்புப் பொருட்கள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 

அம்மா கிரைண்டர், மிக்ஸி, பேன் 

2011-ம் ஆண்டு மீண்டும் முதலமைச்சர் அரியாசனத்தைப் பிடித்து தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்களுக்கு விலையில்லா அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன் ஆகியவற்றை அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

அம்மா காப்பீடு 

2012ஆ-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை அம்மா காப்பீடு என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்தது. 

அம்மா மருந்தகம்

சந்தையில் நாளுக்குநாள் மருந்துபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு அன்றாட நோய் மற்றும் பாதிப்புகளுக்கான மருந்து பொருட்களை மலிவான விலையில் அளிக்க அம்மா மருந்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பிற திட்டங்கள் 

இதனை தாண்டி அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா சேவை மையம் என பல திட்டங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். அவரது புகழ் என்றும் வாழ்க...

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து