73-வது பிறந்த நாள்: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா திருவுருவச்சிலைக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      தமிழகம்
CM 2021 02 24

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73–வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் 73 கிலோ கேக்கை வெட்டி அனைவருக்கும் அவர்கள் வழங்கினர். மேலும் அன்னதானம், நிதிஉதவிகளையும் அவர்கள் வழங்கினார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான நேற்று காலை 9.55 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கும் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

சிறப்பு மலர் வெளியீடு

அதனையடுத்து, அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட, முதல் பிரதியை அவைத் தலைவர் இ. மதுசூதனன் பெற்றுக்கொண்டார்.  தொடர்ந்து, அங்கே குழுமியிருந்த கட்சியின் நிர்வாகிகளுக்கும், கட்சியின் உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள். 

அதை தொடர்ந்து பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 6 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 18 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கி, கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்கள். 

73 கிலோ கேக்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் அம்மாவின் பிறந்த நாளையொட்டி தயார் செய்யப்பட்டிருந்த 72 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி,  நிர்வாகிகளுக்கும், கட்சியின் உடன்பிறப்புகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்கள்.   அதை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியின் உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனு வழங்கப்பட்டதை அவர்கள் பார்வையிட்டனர். 

மருத்துவ முகாம்

அதை தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில், பொது மருத்துவம், இருதய சிறப்பு பரிசோதனை, தோல், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மூட்டு வலி, எலும்பு முறிவு சிகிச்சை, இ.சி.ஜி, ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு கண்டறிதல்; சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த மருத்துவ முகாம் 26.2.2021 வரை நடைபெற உள்ளது.

குறுந்தகடு வெளியீடு

தமிழ் நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா. வளர்மதியின் ஏற்பாட்டின்பேரில், அ.தி.மு.க. இலக்கிய அணியின் சார்பில் ‘‘எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு : பாகம் – 2 என்ற குருந்தகட்டினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து  இலக்கிய அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியையும் துவக்கி வைத்து, அனைவருக்கும் அவர்கள் அறுசுவை உணவு வழங்கினர். 

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தை ஒட்டியுள்ள சாலைகளின் இருமறுங்கிலும் கட்சிக் கொடித் தோரணங்கள், குருத்தோலைகள் அழகுற அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அதே போல், சாலையின் இருமருங்கிலும் தொண்டர்கள் கட்சிக் கொடியினையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கக் கொடியினையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன்,  திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள், துணை செயலாளர்கள் கே.பி.முனுசாமி எம்.பி., ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

6 பேருக்கு நிதியுதவி

கட்சி பணியாற்றும்போது, பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 6 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் குடும்ப நல நிதியுதவியாக, தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 18 லட்சத்தை வழங்கினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து