முக்கிய செய்திகள்

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Edappadi 2020 11-16

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு, அங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் செயல்படுத்திய பல மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது.  தற்போது, அம்மா மினி கிளினிக்கை மூடும் விதமாக அங்கு பணிபுரியும் சுமார் 1820 மருத்துவர்களையும், மற்றும் 1420 மருத்துவப் பணியாளர்களையும் எதிர்வரும் 4.12.2021 முதல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஒரு செய்தி வலைதளங்களில் வந்துள்ளது.

அம்மா மினி கிளினிக் திட்டம் என்பது நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்படும் ஒரு அற்புதமான திட்டம் ஆகும். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த  ஒரு சிறந்த திட்டத்தை இந்த விடியா அரசு நிறுத்த நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள காலத்திலும், தங்களது உடல்நிலையினை கருத்தில் கொள்ளாமல், உண்மையான மருத்துவர்கள் என்ற முனைப்போடு பணியாற்றி, கொரோனா நோய்த் தொற்றை இன்று, மூன்று இலக்க எண்ணிக்கையில் கட்டுக்குள் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை இந்த தி.மு.க. அரசு, வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் பணி நீக்கம் செய்ய உள்ளது என்ற வலைதளச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சி மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு, அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், மக்களின் உடல் நலத்தோடும், அவர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடுவதை உடனே கைவிட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து