முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.1 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்க முடிவு : விரைவில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.1 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் கமி‌ஷன் நிர்ணயித்துள்ள தொகையினை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.30 லட்சமும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.77 லட்சமும் செலவு செய்யலாம். தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு வேட்பாளர்கள் செலவினத் தொகை கடைசியாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தேர்தல் பிரசாரத்தின்போது வாகனங்கள் பயன்படுத்துதல், விளம்பரங்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வேட்பாளர்களுக்கு கூடுதலாக செலவு ஏற்படுகிறது. இதனால் தேர்தல் செலவினத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் கமி‌ஷனுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக கடந்த ஆண்டு உமேஷ் சின்கா, ஹரிஷ்குமார் ஆகிய 2 பேர் கொண்ட சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பாராளுமன்ற தேர்தல் செலவினத் தொகை அதிகரிக்கப்பட்டால் அதை பின்பற்றி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின தொகை ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.38 லட்சமாக உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து