முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பின் உண்மை விபரங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் : முதல்வருக்கு எடப்பாடி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பின் உண்மை விபரங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று முதல்வருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று 7.3.2020 அன்று தமிழகத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டபோது, அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது, எந்த மருந்துகளைக் கொடுப்பது, சிகிச்சை முறை மற்றும் நோயினை கண்டறியும் ஆய்வக வசதி போன்ற எந்தவிதமான விபரமும் தமிழகத்தில் இல்லை. அப்போது, தமிழகத்தில் ஆட்சி புரிந்த அ.தி.மு.க. அரசுக்கு தெரிந்த  ஒரே சிகிச்சை முறை விழித்திரு, விலகியிரு,  வீட்டிலேயேயிரு மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாகக் கழுவுதல் ஆகியவைகள்தான். அடுத்து, களப்பணிகளை மேற்கொண்டு,  பிறகு அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டது. அதை தொடர்ந்து நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவிகிதம், இந்தியாவிலேயே  தமிழகத்தில்தான் அதிகம் என்று பிரதமரே பாராட்டினார். இதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் மூன்றாம் அலை மிக அதிக அளவில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதை இந்த அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், கடந்த 10 நாட்களாக தமிழகம் மூன்றாம் அலையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒமைக்ரான் பரிசோதனை மையங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.  எந்தவித நோய்த் தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டிய அடிப்படை கடமை இந்த அரசுக்கு உண்டு. 

கொரோன நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் இச்சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்றும், ஒமைக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை என்றும் அறிக்கை வெளியிடக்கூடாது. அதே சமயம், நோய்த் தொற்றால் ஏற்படும் உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் உள்ளது உள்ளபடியே தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு. நோய்த் தொற்றை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இந்த விடியா அரசுக்கு உண்டு என்பதை நான் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து