முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்: அரசு பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை : போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

திங்கட்கிழமை, 16 மே 2022      தமிழகம்
Sivasankar 2022 05 16

Source: provided

பெரம்பலூர் : அரசு பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம், தமிழக முதல்வர் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக இதுவரை எந்த அறிவுரையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலங்கள்...

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம், வலயப்பாடி, வேப்பூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., "அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகின்ற சூழலில், இந்த மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து இயக்கப்படுகின்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சட்டரீதியான விதிமுறை.

தொலைதூர மாநிலங்கள்... 

இதன் அடிப்படையில், கேரளா, ஆந்திரா போன்ற தொலைதூர மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டண நிர்ணயம் செய்யும்போது, அரசு அதிகாரிகள் இந்த கட்டணத்தை ஒப்பீடு செய்து ஒரு கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, “தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது” என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

பாதிப்பு வராத வகையில்...

தமிழக முதல்வர் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக இதுவரை எந்த அறிவுரையும் வழங்கவில்லை. டீசல் விலையை மத்திய அரசு ஒவ்வொரு நாளும் கடுமையாக உயர்த்தி வருவதை அனைவரும் அறிவர். இப்படியான சூழலில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இலவச பயணங்கள்... 

தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில்,112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்றார். 

ரூ.48,500 கோடி நஷ்டம்... 

14வது ஊதிய குழு பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது முதல்வர் தலைமையில் அந்த கூட்டம் நடைபெற்றது. வருகிற மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் சீரமைக்கப்படும். போக்குவரத்து துறை ரூ.48,500 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 2000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!