முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Chakrabani 2022-07-05

Source: provided

சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக நேற்று டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசுகையில், " தமிழ்நாடு அரசு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

01.11.2016 முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு,ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்களும் ரூ.4,000 ரொக்கத் தொகையும் 2021 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியதோடு 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களையும் வழங்கியது.

தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98 சதவீதம் கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதை இந்த நேரத்தில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் வழிகாட்டுதலில் மத்திய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து நம் நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட உறுதுணை புரிவோம் என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!