முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பிடிவாதம்: தொடர்ந்து 6 - வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்: அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      இந்தியா
Parliament 2023 03 15

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிகளின் தொடர் அமளியால் நேற்றும் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக எந்த அலுவல்களும் நடைபெறாமல் பாராளுமன்றம் முடங்கியது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் கடந்த வாரம் முழுவதும் முடங்கியது. இந்த நிலையில் ஒரு வார முடக்கத்திற்கு பின்னர், நேற்று (திங்கள்கிழமை) பாராளுமன்றம் காலையில் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். 

அவர், "நான் அவையை நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் அவையை நடத்துகிறேன். இல்லையென்றால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படும்" என்றார். இருந்தும் அவையில் அமளி நீடித்ததால் மதியம் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்கட்சிகள், ஆளுங்கட்சியினர் தனது அறையில் சந்தித்து பாராளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களையும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட, விதி 267-ன் கீழ் பல்வேறு நோட்டீஸ்கள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 நோட்டீஸ்களில் 9 காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. அனைத்து நோட்டீஸ்களும் நிராகரிக்கப்படுகிறது என்று அவைத் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று மதியம் 2 மணிக்கு மக்களவைக் கூடியது. அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். எம்.பிக்களின் கோஷங்களுக்கு மத்தியில், பொதுத்துறை நிறுவங்களுக்கான குழுவின் அறிக்கை உறுப்பினர்கள் மேஜை மீது வைக்கப்பட்டது. இருந்த போதிலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இந்த அமளிகளைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் மாநிலங்களைவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமங்கள் குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேநேரத்தில், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி லண்டனில் பேசியது தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி வலியுறுத்தி வருகின்றது. 

இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கியது முதல் கடந்த வாரம் முழுவதும் எந்த அலுவல்களும் நடைபெறாமல் பாராளுமன்றம் முடக்கப்பட்டது. அது இரண்டாவது வாரமாக நேற்றும் தொடர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து