முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் : தலைமை நீதிபதி முன்பு முதல்வர் நேரில் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
CM-4 2023 03 25

Source: provided

மதுரை : புதிதாக 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், நாட்டில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார்.

மதுரை மாவட்ட கோர்ட்க்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்-செசன்சு கோர்ட் தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட் மற்றும் செசன்சு கோர்ட்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

மதுரை கோர்ட்டில் நடந்த கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வழக்காடும் நிலை வரும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்.

நீதித்துறை கட்டமைப்பில் தி.மு.க. அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது. புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம். 3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது-  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்ற பின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் முழுவதும் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மனுதாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 10 மொழியாக்கம் செய்ய உத்தரவிட்டது. அதில் சென்னை ஐகோர்ட் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கத்தில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து