முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: ரூ. 15 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      தமிழகம்
CM-1 2023 03 28

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் ரூ.15 கோடி செலவிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர்  மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் அவர் வழங்கினார்.  

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 22.9.2021 அன்று தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாரிக்கப்படுகின்றன என்றும்,  இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். 

அதன்படி,  அனைத்து  மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் வரும் 31-ம் தேதிக்குள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வர்த்தக மேம்பாட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலுள்ள துறை அலுவலர்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி இரண்டு மாதங்களில் அளிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை  முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டிற்கான அறிவுசார் பங்குதாரராக அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தை நியமித்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. 

ஒப்பந்தம்

இதனை செயலாக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியர் நமன் தேசாய் மற்றும் பேராசிரியர் ஜோஷி ஜேக்கப் ஆகியோருக்கும் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

முடிவுற்ற பணிகள் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் 1.32 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனை வசதி, நீலகிரி மாவட்டம், குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில்  ஊட்டி டீ -யின் அதிநவீன கலவை மற்றும் சிப்பம் கட்டும் அலகு, 

இராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் பல்வேறு   வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொதுவசதி  மையக் கட்டிடம், 

திருவள்ளூர் மாவட்டம்,  திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டிடம்,  காக்களூர் தொழிற்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டிடம், காக்களூர் தொழிற்பேட்டையில் பல்வேறு   வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொது உற்பத்தி மையக் கட்டிடம் என மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.   

பட்டாக்கள் வழங்கல்

மேலும் தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களான  210 மனைதாரர்களுக்கு பட்டா வழங்குவதை தொடங்கி வைத்து, அதில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டா வழங்கினார். 

இந்த ஒதுக்கீட்டாளர்கள் 1972, 1979, 1982, 1989 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் ஆவர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச்  செயலாளர் இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து