முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Sankaran-temple 2024-04-13

Source: provided

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவர். 

இந்த ஆண்டிற்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் பெருங்கோட்டூர் சென்று கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. 

காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, முப்பிடாதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ம் தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. சித்திரைத்திருநாளில் சுவாமி, அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து