முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      விளையாட்டு
Sanju-Samson

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டும், பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்னும் அடித்தனர். இந்நிலையில், ரோகித்துக்கு பின் சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியின் கேப்டனாக வளர்த்தெடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் பார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்பதற்கான சான்று. ஜெய்ஸ்வால் மற்றும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வேண்டும். ரோகித்துக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளாதா...? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் மீண்டும் கான்வே?

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த டெவான் கான்வே காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்னும் சில நாட்களில் அணியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப ரிச்சர்ட் கிலீசன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டெவான் கான்வே மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு டெவான் கான்வேவை தயார் செய்யும் பொறுப்பை சி.எஸ்.கே நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது காயத்தை குணப்படுத்தி மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதியை மீட்க பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

நன்றி தெரிவித்த ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்று ஆரம்பம் முதலே நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பந்தை சரியாக பார்த்து என்னுடைய ஷாட்டுகளை அடிப்பதில் உறுதியாக இருந்தேன். இதுவரை என்ன செய்தேனோ அதை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். அதை தவிர்த்து என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. 

கடினமான நேரத்தில் என்னை வழி நடத்திய விதத்திற்காக என்னுடைய சீனியர்களுக்கு உண்மையாக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக சங்கா சார், சஞ்சு பாய் ஆகியோர் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தனர். அதை பயன்படுத்தி வலைப்பயிற்சியிலும் களத்திலும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டம் குறித்து சந்தீப் சர்மா 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நேற்று முன் தினம் தான் பிட்டானேன். பிட்டான பின் விளையாடிய முதல் போட்டி நல்ல உணர்வை கொடுக்கிறது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. எனவே தொடர்ந்து வேரியஷன்களை மாற்றி கட்டர்களை வீசுவோம் என்பதே என்னுடைய திட்டமாகும்.

கடைசிக்கட்ட ஓவர்களில் நீங்கள் பந்து வீசுகிறீர்கள் என்றால் உங்களுக்கு பெரிய மனம் வேண்டும். ஐ.பி.எல் தொடரில் பல வீரர்கள் அந்த நேரத்தில் அழுத்தத்தை சந்தித்ததை பார்த்துள்ளேன். எனவே அங்கே அசத்துவதற்கு நீங்கள் பெரிய மனதுடன் திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன் நான் விலை போகவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இப்போதும் நான் மாற்று வீரராக வந்துள்ளேன். எனவே ஒவ்வொரு போட்டியையும் போனஸ் போல மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாண்ட்யா குறித்து அதிருப்தி

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பாண்ட்யா தலைமையில் ஆடி வரும் மும்பை அணி இதுவரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி பேட்டிங் செய்த போது இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா நல்ல பினிஷிங் கொடுக்கத் தவறியதால் கடைசியில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்காதது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமானது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு கட்டத்தில் தோனிக்கு பின் இந்தியாவின் சிறந்த பினிஷர் என்று பாராட்டப்பட்ட ஹர்திக் பாண்ட்யா காயத்தை சந்தித்ததிலிருந்தே சமீப காலங்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். 

இந்நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறமை பாண்ட்யாவிடம் குறைந்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை கீழே சென்று கொண்டிருக்கிறது. பெரிய கண்ணோட்டத்தில் மிகப்பெரிய கவலைக்குரிய அம்சமாகும். வான்கடே மைதானத்தில் அவர் வித்தியாசமாக செயல்படுகிறார். ஆனால் சிறிய உதவி இல்லாத பிட்ச்கள் அவருக்கு கவலையாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து