முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகுக்கும் 'முதல்வர் மருந்தகம் திட்டம்' பொங்கல் முதல் தொடக்கம்: சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-1-2024-08-15

சென்னை, “குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்படும், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும்” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை, சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை - புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நேற்று தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். கொடி வணக்கம் செலுத்திய பின்னர் உரையாற்றினார். பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என மேற்கோள் காட்டி தந்து உரையை தொடங்கினார். இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், அதிகாரிகள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். நம் நாட்டின் நீண்ட விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்ட விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அவர்களை இந்த அரசு போற்றுகிறது. பன்முகத்தன்மையின் அடையாளம் தேசியக் கொடி.

இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முதல்வர்கள் கொடியேற்றும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. சமூக மாற்றத்தை நோக்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக விளங்கி வருகிறது. நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது திராவிட மாடல் அரசின் சார்பாக இந்த வீர விடுதலைத் திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.

தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. 65 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பின்னர் பல்வேறு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து