Idhayam Matrimony

மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை: புதுப்பிக்கப்பட்ட மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவு தினத்தை ஒட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம் என முழக்கமிட்டார். 

முன்னதாக இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு, 1938ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் அனைவரும் இந்தியைக் கட்டாயமாகக் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக, பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு 1938ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நாளில் இந்தி கட்டாயப் பாடமாகக் கொண்டு வரப்பட்டது. இந்தியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையேல் அவர்கள் தேர்வில் தோல்வியுற்றவராகவே அறிவிக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வெளியானது.

இதன் பிறகுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பல தலைவர்கள் பங்குபெற்றனர். பல கட்சிகளும் இதனை எதிர்த்து போராடின. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ் இயக்கம் உள்ளிட்ட மக்கள் இயக்கங்கள் குறிப்பாக சர்ஏடி பன்னீர் செல்வம், தந்தை பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு பிள்ளை, மு.சு. பூரணலிங்கனார், அன்னை மீனாம்பாள் சிவராஜ், ஈழத்தடிகள், பட்டுக் கோட்டை அழகிரி, மு.தருமாம்பாள், காஞ்சிமணி மொழியார், புலவர் அருணகிரிநாதர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அறிஞர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியில் தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்து வந்த லட்சுமணன்-அம்மாக் கண்ணு இணையருக்கு 1919-ல் பிறந்த நடராசன் என்பவர் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவரை 30 டிசம்பர் அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்தது காவல் துறை.

பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராசன் 1939ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி தமிழுக்காகத் தன்னை முதற்பலியாக்கிக் கொண்டார். குமார ராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையில் இருந்து தன்னுடைய சீருந்திலேயே கறுப்புக் கொடி போர்த்தி. பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. மறுநாள் ஜனவரி 16ல் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலத்தில் பேரறிஞர் அண்ணா, டாக்டர் தர்மாம்பாள், அ.பொன்னம்பலம், கு.மு.அண்ணல் தங்கோ. ஆல்பர்ட் ஜேசுதாசன், நாராயணி அம்மையார் முதலானோர் புகழுரையாற்றினர். நடராசனின் இழப்பு, மேலும் பலரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-39) முதற் களப்பலியான நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன்-மீனாட்சி இணையருக்குப் பிறந்த தாளமுத்து என்ற இளைஞரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றுச் சிறைப்பட்ட மூன்று வாரங்களுக்குள் 1939 மார்ச் மாதம், 11ம் தேதி உயிரிழந்தார்.

மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளி விளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுக்கூரப்படுகிறார்கள். இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் (15-1-1939) தாளமுத்து (11-3-1939) இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை, மூலக் கொத்தளத்தில் தந்தை பெரியார் அவர்கள் அடிகோலி திறந்துவைத்தார்.

இந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும், ஜனவரி 25ம் நாளை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்து ஆணையிடப் பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி 25ம் நாளன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து