முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
cm 2025-01-23

Source: provided

சென்னை : தி.மு.க. இயக்கத்தை அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று இன்றைக்கு யார் யாரோ கிளம்பி இருக்கிறார்கள், கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கனவெல்லாம் நிச்சயம் பலிக்காது, எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க. நிர்வாகி...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் இரா.ஏ. பாபு இல்லத் திருமண விழா முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய போராட்டம், நெருக்கடி நிலைக்காலம். அந்த நெருக்கடி நிலைக்காலத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த தியாகங்கள்; தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, அந்த தியாகங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அவர்கள் பட்டிருக்கும் கஷ்டங்கள் நஷ்டங்கள் இதெல்லாம் வரலாற்றில் தெளிவாகப் பதிந்திருக்கக் கூடியவை. அப்படி வரலாற்றில் பதிவாகியிருக்கக் கூடிய வகையில் எதற்கும் அஞ்சாமல், எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கக்கூடியவர்களாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

நிச்சயம் பலிக்காது...

இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, இந்தக் கழகத்தை அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்களே, அவர்கள் கனவெல்லாம் நிச்சயம் பலிக்காது,  எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு நாடு இருக்கும் சூழ்நிலை எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலும் எஸ்.ஐ.ஆர். எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் நான்காம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

சட்டப் போராட்டம்... 

ஆனால் இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நாம் தீர்மானம் போட்டு அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டிற்கு நாம் சென்றிருக்கிறோம். வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சட்டப் போராட்டம் ஒரு பக்கம் என்று சொன்னாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அது, இன்றைய நிலையில் மிக மிக அவசியமான ஒன்று என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

தலைநகரங்களில்... 

அதற்காக வருகிற 11-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம் என்ற செய்தியைக்கூட நேற்றைக்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, நாம் நம்முடைய உணர்வை வெளிப்படுத்த இருக்கிறோம். ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு நாள்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நான்காம் தேதிக்குள் இந்தப் படிவங்களை நிரப்பி அதைச் சமர்ப்பித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

இழக்கும் சூழ்நிலை... 

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரைக்கும், டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் மூன்று முறை அவர்கள் வர இருக்கிறார்கள். நாம் வேலைக்குச் சென்று விட்டால், ஏதாவது பணிகளுக்குச் சென்று விட்டால், வீட்டில் இல்லாமல் இருந்தால், நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால், இந்தப் பணி முடிந்த பிறகு ஆன்லைனில் நாம் தொடர்பு கொண்டு சேர்க்கின்ற முயற்சி இருக்கிறது. அது தேர்தல் நேரத்தில் எவ்வளவு பெரிய நெருக்கடி எல்லாம் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, குறிப்பாக ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

ஏமாந்துவிடக் கூடாது...

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு ஒரு தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் தந்திருக்கிறது. ஆனால் அதை மட்டுமே நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது. அதனால்தான் நம்முடைய கட்சியைப் பொருத்தவரைக்கும், நம்முடைய சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க .சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். தி.மு.க. நிர்வாகிகள் உதவிக்காக ஒரு தொலைபேசி எண்ணையும் அறிவித்திருக்கிறோம். தி.மு.க .நிர்வாகிகள் அனைவரும் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தக் குழப்பம் இருந்தாலும் இதில் நீங்கள் கேட்டுத் தெளிவு பெறலாம்.

ராகுல் போராட்டம்...

அதுமட்டுமல்ல, நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்தின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி இதற்காகப் பெரிய போராட்டத்தை - இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, கர்நாடகம், அரியாணா பகுதிகளில் எந்த அளவிற்கு வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது என்று எல்லாம் ஆதாரப்பூர்வமாக எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

வருமுன் காப்பது... 

அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது. வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். இந்தப் பெரும் பொறுப்பை கழகத்தின் வாக்குச்சாவடி உதவியாளர்கள்(2) ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் காவலர்களாகக் கழகத்தின் பூத் ஏஜெண்டுகள் செயல்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.

வாக்குத்திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பெரிய போராட்டத்தை, இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, கர்நாடகம், அரியாணா பகுதிகளில் எந்த அளவிற்கு வாக்குத்திருட்டு நடந்திருக்கிறது என்று எல்லாம் ஆதாரப்பூர்வமாக அவர் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது. வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும்.

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து