முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட கலெக்டரின் உடல்நிலை மோசமானது...!

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப்.25 - சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, தமிழ்நாட்டை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ்பால் மேனனின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், எனவே மத்தியஸ்தர்கள் வரும் போது கையோடு மருந்துகளை கொண்டு வருமாறும் தீவிரவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த ஒரு மாநிலமாகும். இங்கு நக்சலைட்டுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்களை ஒடுக்க மத்திய அரசும், மாநில அரசும் தவறி விட்டது என்றே சொல்லலாம். 

இந்த நிலையில் சுமார் 4 தினங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்த அலெக்ஸ்பால் மேனன் நக்சல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அலெக்ஸ்பால் மேனன் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மக்களோடு மக்களாக நெருங்கி பழகக் கூடியவர். சத்தீஸ்கரில் தீவிரவாதிகளை ஒடுக்க இவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிகிறது. எனவே இவரது உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்த நிலையில்தான் அலெக்ஸ்பால் மேனன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இவரை மீட்டுத் தருமாறு அவரது மனைவி மற்றும் மாமனார், தந்தை ஆகியோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து கடத்தப்பட்ட கலெக்டரை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்றத்தில் தம்பிதுரையும் எழுப்பினார். மத்திய அரசும், மாநில அரசும் நக்சல் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்திய அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் தம்பிதுரை, கடத்தப்பட்ட கலெக்டரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். 

இந்த நிலையில் கலெக்டரை கடத்திய தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 3 மத்தியஸ்தர்கள் கொண்ட ஒரு குழுவை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்த குழுவில் முன்னாள் தேசிய எஸ்.சி., எஸ்.டி கமிஷன் தலைவர் பி.டி. ஷர்மா, அகில இந்திய ஆதிவாசி மகாசபை தலைவர் மணீஷ் குஞ்சம் மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அறிவித்தனர். ஆனால் இக்குழுவில் இடம்பெற முடியாது என்று பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மறுத்து விட்டார். இதே போல மணீஸ் குஞ்சமும் இக்குழுவில் இடம்பெற மறுத்து விட்டார். தமக்கு கட்சிப் பணிகள் உள்ளன. மற்றும் சூழ்நிலைகளை காரணம் காட்டி இவரும் இக்குழுவில் இடம்பெற மறுத்து விட்டார். இதனால் கலெக்டரை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளோ, தாங்கள் குறிப்பிட்டுள்ள 3 நபர்கள் வந்தால்தான் பேச அனுமதிப்போம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். எனவே மத்தியஸ்தர்களாக செயல்பட தாங்கள் குறிப்பிட்ட 3 பேர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்றும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். 

அது மட்டுமல்ல, கலெக்டரின் உடல்நிலையும் மோசமாகி விட்டது. இத்தகவலை மாவோயிஸ்டு தீவிரவாதிகளே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கலெக்டரின் உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே மத்தியஸ்தர்கள் வரும் போது கையோடு மருந்துகளையும் கொண்டு வாருங்கள் என்று தீவிரவாதிகள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். கடத்தப்பட்ட கலெக்டர் மேனன் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் அறிக்கையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மேலும் கூறுகையில், தாமதிக்கும் தந்திரத்தில் சத்தீஸ்கர் அரசு ஈடுபடக் கூடாது. காரணம், மேனனின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

கலெக்டரின் உடல்நிலை மோசமானது பற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தார் பதறிப்போய் உள்ளனர். ஆனால் தீவிரவாதிகளோ அவரை மீட்க 3 நிபந்தனைகள் விதித்துள்ளனர். பல்வேறு சிறைகளில் உள்ள தங்கள் சகாக்கள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும். தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது உட்பட 3 முக்கிய கோரிக்கைகளை அவர்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில்தான் கலெக்டரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்