முக்கிய செய்திகள்

டெல்லியில் திரைப்பட விழா சுசீந்திரன், அப்புக்குட்டிக்கு விருது

சனிக்கிழமை, 5 மே 2012      சினிமா
Image Unavailable

 

டெல்லி, மே. - 5 - 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இந்த விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அப்புக்குட்டி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றனர்.  வங்காள நடிகர் சவுமித்ர சட்டர்ஜிக்கு, வாழ் நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கோ விருது இந்த விழாவில் வழங்கப்பட்டது.  அழகர்சாமியின் குதிரை தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்துக்கு தங்கத்தாமரையும், ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த அப்பு குட்டி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார். அவருக்கு வெள்ளி தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது வாகை சூடவா படத்துக்கு வழங்கப்பட்டது. அதன் தயாரிப்பாளர் முருகானந்தம் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றார்.  உமேஷ் குல்கர்னி டைரக்ட் செய்த மராத்தி படம் தியோல், பியாரி ஆகிய சினிமா படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை பகிர்ந்து கொண்டன. இந்த படங்களுக்கு தங்கத் தாமரையும், ரூ.2.5 லட்சம் பரிசும் வழங்கினார். இந்தி நடிகை வித்யா பாலன், தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து இருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஹமீத் அன்சாரி வழங்கினார்.  தியோல் படத்தில் கதாநாயகனாக நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரமும் ஹமீத் அன்சாரி வழங்கினார். பஞ்சாபி மொழியில் வெளியான ஆன்கே கியோரி டா டான் சினிமாவை இயக்கிய டைரக்டர் குர்விந்தர் சிங்குக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், தங்கத் தாமரையும், ரூ.2.5 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த படம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பரப்புக்கான விருதையும், பஞ்சாபி மொழியிலான சிறந்த படமாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. எஸ். நல்லமுத்து இயக்கிய டைகர் டைனாஸ்டி செய்திப் படம் சிறந்த சுற்றுச் சூழல் விருது மற்றும் செய்தி படங்களுக்கான சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளை பெற்றன. நல்ல முத்துவுக்கு 2 வெள்ளித் தாமரைகளையும், விருதுகளையும், ரொக்கப் பரிசுகளையும் ஹமீத் அன்சாரி வழங்கினார். குமாரராஜா தியாகராஜன் இயக்கிய ஆரண்யகாண்டம் சினிமாவுக்கு, சிறந்த புதுமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டது. குமாரராஜ தியாகராஜன் தங்கத் தாமரையும், ரூ.1.5 லட்சமும் பரிசு பெற்றார். இந்த படத்தை எடிட் செய்த கே.எல்.பிரவீன் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதினை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: