முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டர் சகாயம் மாற்றம் - மிஸ்ரா நியமனம்

புதன்கிழமை, 23 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே.24 - மதுரை கலெக்டர் பதவியிலிருந்து சகாயம் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் மதுரை கலெக்டராக சகாயம் நியமிக்கப்பட்டார். தர்தலின்போது ஆளும் திமுகவினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சகாயம் தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் அதே பதவியில் நீடித்து வந்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனினும் சகாயம் மட்டும் மாற்றப்படாமல் மதுரை கலெக்டராக நீடித்து வந்தார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கல்லூரிக்கு அரசு நிலம் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி திமுகவினரை அதிர வைத்தார். மதுரை ஆதீன விவகாரத்தில் நித்தியானந்தா மீது அளிக்கபட்ட புகாரில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு மட்டுமின்றி அதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை கலெக்டர் பொறுப்பிலிருந்த சகாயத்தை கோ​ஆப்டெக்ஸ் துறை நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் தேபேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது, மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கோ ஆப் டெக்ஸ் துறையின் சிறப்பு அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்த பிங்களே விஜய் மாருதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மதுரை கலெக்டராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திருவண்ணாமலை கலெக்டராக டாக்டர். விஜய மாருதி பிங்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முன்னாள் இணைச் செயலாளராகப் பணியாற்றி, தமிழக அரசு பணிக்குத் திரும்பிவந்துள்ள பிராஜ் கிஷோர் பிரசாத் போக்குவரத்துறையில் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணியை ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரபாகர ராவ் வகித்து வந்தார்.
முன்னாள் இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும், பொதுத்துறை தேர்தல் பிரிவில் துணை செயலாளராகவும் பணியாற்றி, விடுமுறை முடிந்து திரும்பியுள்ள பூஜா குல்கர்னி, சென்னை மாநகராட்சியில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம்  அலங்காநல்லூரில் உள்ள தேசிய  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் ஆர். நந்தகோபால், மதுரை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் எஸ்.நடராஜனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொல்லியல் துறையில் ஆணையராக உள்ள சந்திர பிரகாஷ் சிங் மத்திய அரசு பணியில் தேசிய மருந்து விலைக்கட்டுப்பாட்டுத் துறை தலைவராக, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை கூடுதல் செயலாளர் அந்தஸ்த்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்