முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ஜ.க.ஆளும் மாநில முதல்வர்களுடன் மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுலை - 3 - ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் அக்கட்சியின் மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மாவும் பங்கேற்றார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜ.க., அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் இல்லத்தில் நேற்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, சத்தீஷ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், கோவா முதல்வர் பாலிக்கர், இமாச்சல பிரதேச முதல்வர் துமால் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்களில் ஒருவரான அனந்த குமார் ஆகியோர் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப்போட வாய்ப்பு கொடுக்காமல் அனைத்து எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் சங்மாவுக்கு ஆதரவாக ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக டுத்துக்கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மாவும் கலந்துகொண்டு தனது கருத்துக்களை எடுத்துக்கூறினார். இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்