முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கவாழ் தெலுங்கர்கள் மாநாடு ஆந்திர முதல்வர் துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

நியூயார்க், ஜுலை - 3 - அமெரிக்க வாழ் தெலுங்கர்கள் மாநாட்டை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வருகிற 7 ம் தேதி ஐதராபாத்தில் இருந்துகொண்டே செயற்கைக்கோள் டி.வி. மூலம் முறைப்படி துவக்கிவைக்கிறார்.  அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அமெரிக்க தெலுங்கர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நியூயார்க் நகரில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில் மூன்று நாள் அமெரிக்கவாழ் தெலுங்கர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தெலுங்கர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த மாநாடு வருகிற 6 ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கியபோதிலும், இந்த மாநாட்டை வருகிற 7 ம் தேதி ஐதராபாத்தில் இருந்து செயற்கைக்கோள் டி.வி.மூலம் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி முறைப்படி துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். இந்த தகவலை அமெரிக்க வாழ் தெலுங்கர்கள் சங்கத் தலைவர் ராஜேந்தர் ஜின்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மொழி பேசும் இந்தியர்கள் தங்களது வருடாந்திர மாநாட்டை ஜூலை 4ம் தேதி தொடங்கி கொண்டாடுவது வழக்கமாக இருந்துவருகிறது. ஜுலை 4 ம் தேதிதான் அமெரிக்காவின் சுதந்திர தினமாகும். இந்த சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் வார விடுமுறை நாட்கள் அதிகமாக விடப்படும். அதனால் இந்தியர்கள் தங்கள் விழாக்களை வார விடுமுறை நாட்களோடு இணைந்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் இப்போது அமெரிக்க வாழ் தெலுங்கர்கள் மாநாடும் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் தங்களது ஆண்டு விழாக்களை இந்த ஜுலை 4ம் தேதியை ஒட்டியே ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டதற்கு, இந்த காலத்தில்தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளன. மேலும் குடும்பங்கள் விடுமுறை கொண்டாட்டத்திற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் செல்லும் காலமாகவும் உள்ளது. எனவேதான் இந்த காலத்தில் விழாக்களை நாங்கள் கொண்டாடுகிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்