சென்னை, ஏப்.2 - தேர்தல் ஆணையம் விதிமுறைகளை சரியாக அமல்படுத்தி வருவதாக கூறிய ஜெயலலிதா, 218 இடங்களில் அ.தி.மு.க.கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று சென்னையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்காக இவரது வீட்டிலிருந்து புறப்பட்டபோது, வீட்டு வாசலில் டி.வி.சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு விதிமுறைகளை சரியாக அமல்படுத்தியுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன்.
தேர்தல் ஆணையம் பற்றி கருணாநிதி கூறுகையில், எமர்ஜென்சி போல் நடப்பதாக கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவரது ஆட்சிக்காலம் தான் தமிழக மக்களுக்கு எமர்ஜென்சி காலம் போல் இருக்கிறது.
அ.தி.மு.க. 164 இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னுடைய கணிப்பு அ.தி.மு.க. அணி 218 இடங்களில் அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.