முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டு எனும் ஆயுதம் மூலம் தி.மு.க. கூட்டணியை மக்கள் சம்ஹாரம் செய்யவேண்டும்- விஜயகாந்த்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.- 5 - ஓட்டு எனும் ஆயுதம் மூலம் தி.மு.க. கூட்டணியை மக்கள் சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் பேசினார். 

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளர் ஏ.கே.டி. ராஜாவை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் அக்கட்சி நிறுவனர் விஜயகாந்த் பேசியதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கிய பின்னர் முதல் மாநாட்டை நடத்தினார். நானும் திருப்பரங்குன்றம் அருகே மாநாடு நடத்தி கட்சியை துவக்கினேன். அதனால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியை தே.மு.தி.க. விற்காக அ.தி.மு.கவிடம் கேட்டுப் பெற்றேன். முருகப் பெருமான் சூரனை தன் வேலால் வதம் செய்து தேவர்களை காப்பாற்றினார். அதைப் போன்று மக்களாகிய நீங்கள் ஓட்டு எனும் ஆயுதம் மூலம் ஏப்ரல் 13 ம் தேதி தி.மு.க. கூட்டணியினரை வதம் செய்து அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். என்னை மதுரைக்கு வர முடியுமா என அழகிரி கேட்கிறார். நான் மதுரையில் பிறந்தவன்தான். அழகிரிதான் வெளியூரில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். 

எனது மானசீகமான குரு எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் தொடங்கிய அ.தி.மு.க.வுடன்கூட்டணி வைத்துள்ளேன். தமிழக மக்களையும், தமிழகத்தையும் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். கூட்டணியை நானாக முடிவு செய்யவில்லை. தொண்டர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பியதாலும், மக்கள் விரும்பியதாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அன்று நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். இன்று நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கவே அளிக்காதீர்கள். 

ஊடகங்கள், லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டன. அதை தி.மு.க.வினர் குடும்ப தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை. மின்வெட்டு காரணமாக மக்கள் மரத்தடியில் காற்று வாங்கும் நிலை உருவாகி விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டன. அழகிரி தற்போது அழுதகிரியாகி விட்டார். நான் மதுரையில்தான் தங்குகிறேன். உங்கள் ஆட்களை கூட்டிக் கொண்டு வாருங்கள். பார்த்துக் கொள்வோம். நான் மதுரைக்காரன்தான். அழகிரிதான் கரையான் புற்றுக்குள் புகுந்த கருநாகம் போல் மதுரைக்கு வந்துள்ளார். ஓட்டுக்கள் மூலம் அவர்களை அடித்து விரட்ட வேண்டும். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஈவு இரக்கம் பார்க்காதீர்கள். 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார் கருணாநிதி. அதை கொடுத்திருந்தாலாவது காய்கறி பயிரிட்டு விலைகளாவது குறைந்திருக்கும். 

மக்களை ஏமாற்றி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கின்றனர். கருணாநிதிக்கு எப்போதுமே திருட்டு புத்திதான். அலிபாபா 40 திருடன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர். திருடர்களிடம் இருந்து கொள்ளையிட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வார். ஆனால் கருணாநிதியோ, நானூறு திருடர்களுடன் (குடும்பத்தினர்) உள்ளார். அந்த 400 திருடர்களும் மக்களிடம் கொள்ளையிட்டு கருணாநிதிக்கு கொடுக்கின்றனர். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என கருணாநிதி புலம்புகிறார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும். கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவதற்காக அடிக்கடி டெல்லி சென்றார். தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவர் டெல்லி சென்றது உண்டா?

கருணாநிதி தமிழின காவலர் அல்ல. தமிழினத்தை அழித்தவர். தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. கருணாநிதி மாறி மாறி பேசுகிறார். குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் அழகிரி ஏன் முன் ஜாமீன் வாங்குகிறார். அ.தி.மு.க. கூட்டணியை பிரிக்கவும், காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறவும் கருணாநிதி அவரது மகன் அழகிரி நினைக்கின்றனர். அது நடக்காது. கலைஞரின் வீடா அல்லது தமிழ்நாடா என யோசித்து மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!