முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ஆட்சி அமைவது உறுதி - அதிமுக வேட்பாளர்கள் பேட்டி

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.14  - தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைவது உறுதி என்று மதுரை அதிமுக வேட்பாளர்கள் வாக்களித்துவிட்டு தெரிவித்தனர்.  அதிமுக தலைமை கழகம் வேட்பாளர்களை அறிவித்ததுமே மதுரை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தாங்கள் போட்டியிடும் தொகுதியில் ஒரு வீடு கூட விடுபடாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர். சென்ற இடமெல்லாம் அதிமுக வேட்பாளர்கள் மிகுந்த வரவேற்பை அளித்தனர். பெண்கள் திரண்டு வந்து வேட்பாளர்களின் பேச்சை ஆர்வமுடன் கேட்டனர். வாக்குப்பதிவு நாளான நேற்று மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மதுரை மேற்கு அதிமுக வேட்பாளருமான செல்லூர் கே.ராஜூ குடும்பத்துடன் வந்து  காலை 8.30 மணிக்கு மீனாட்சி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். தமிழகத்தில் ஒரு  புதிய மாற்றத்தை உருவாக்க மக்கள் மனதில் எழுச்சி அலை உருவாகி உள்ளது. நான் போட்டியிடும் மேற்கு தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைவது உறுதி என்றார்.

  மதுரை வடக்குத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு வாக்களித்தார். பின்னர்அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு எழுச்சி அலை உருவாகி உள்ளது. நான் போட்டியிடும் வடக்கு தொகுதியில் மக்கள் எனக்கு அமோக ஆதவு அளித்தனர். வாக்காளர்களின் ஆர்வத்தை பார்க்கும் போது திமுக அரசு அகற்றப்பட்டு, ஜெயலலிதா அரசு அமைய போவது நிச்சயம் என்றார். இதேபோல் மதுரை கிழக்குதொகுதி அதிமுக வேட்பாளர் கே.தமிழரசன் மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறும் போது, நான்  பிரச்சாரத்திற்கு  சென்ற இடங்களில் எல்லாம்  வாக்காளர்கள் இரட்டை இலைக்கு தான் எங்கள் ஓட்டு. அம்மா ஆட்சிக்கு வந்ததும் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்று முறையிட்டனர். வாக்குப்பதிவில் மக்களின் ஆர்வத்தை பார்க்கும் போது  தமிழகத்தில் அதிமுக ஆட்சி வரப்போவது கண் கூடாக தெரிகிறது என்றார்.

    இதே போல், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா அவரது சொந்த ஊரில் வாக்களித்தார். திருமங்கலம்  தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.முத்துராமலிங்கம் மதுரை அவனியாபுரத்தில் உள்ள சிஎன்என் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சாமி மேலூர் மில்கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மதுரை தெற்கு தொகுதி மார்க்சிய கம்யூ.வேட்பாளர் இரா. அண்ணாதுரை மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்