முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 வாக்கு சாவடிகளில் நேற்று வாக்கு பதிவு நடந்தது

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.17 - முறைகேடு மற்றும் எந்திர கோளாறு பற்றி எழுந்த புகாரை ஒட்டி 8 வாக்குசாவடிகளில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது.  இதில் மொத்தம் 8 வாக்கு சாவடிகளில் சராசரி 81.3 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13​ந்தேதி நடந்தது. சராசரியாக 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. தேர்தலின்போது நெய்வேலி, கிள்ளியூர், திருவிடைமருதூர், ஆரணி, போடிநாயக்கனூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் முறைகேடு மற்றும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ஆரணி தொகுதி புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் மின்னணு எந்திரம் கோளாறு ஆனது. மதியம் 1 மணிக்கு பிறகு பதிவான வாக்குகள் எந்திரத்தில் பதிவாகவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் மறுதேர்தல் நடத்த உத்தர விட்டது. நெய்வேலி தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 55, 56 எண்ணுடைய 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நாளில் மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கியது. கலவரம் நடந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி பருத்திக்குடி ஊராட்சியில் 3 வார்டுகள் உள்ளன. இதில் பருத்திக்குடி, படைத் தலைவன்குடி, கோவில் பத்து,வளையாவட்டம், திருக்கழிதட்டை ஆகிய பகுதிகள் உள்ளது. பருத்திக்குடி வாக்காளர்களுக்கு வளையாவட்டம் பள்ளியிலும், வளையா வட்டம், திருக்கழிதட்டை பகுதிகளுக்கு பருத்திக்குடி பள்ளியிலும் வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பருத்திக்குடிக்கும் வளையாவட்டத்துக்கும் இடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவ்வளவு தூரம் சென்று ஓட்டு போட முடியாது என்று பொது மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. போடி தொகுதி சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தேர்தல் அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட வித்தியாசம் காரணமாக இன்று காலை அங்கு மறுவாக்குப்பதிவு நடந்தது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் புளியம் பட்டி 2​வது எண் வாக்குச் சாவடியில் 91 சதவீதம் வாக்குகள் பதிவானது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பார்வையாளர் தீரஜ்குமார் விசாரணை நடத்தினார். மேலும் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு கட்சி ஏஜெண்டு வாக்காளர்களை மின்னணு எந்திரம் அருகே அழைத்து சென்று ஓட்டு போட வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் புளியம்பட்டி கிராமத்தில் உள்ள 2​வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என நேற்று மதியம் அறிவித்தார். குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் 121​வது எண் கொண்ட வாக்குச்சாவடி அனந்தமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு சாவடியில் வாக்குபதிவு முடிந்து மொத்த வாக்குகளை கணக் கிடும் போது 36 வாக்குகள் மாயமானது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் மொத்தம் 1136 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் 737 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் கடைசியாக வாக்கு பதிவு எந்திரத்தில் 701 வாக்குகள் மட்டும் பதிவானதாக எந்திரம் காட்டியது. அதைத் தொடர்ந்து இந்த வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 13​ந் தேதி தேர்தலின்போது வாக்காளர்கள் எந்த ஆவணத்தை காட்டி வாக்களித்தார்களோ, அந்த ஆவணங்களை காட்டி வாக்களித்தனர். அப்போது வாக்களர்களின் இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. 8 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மறு ஓட்டுப்பதிவை முன்னிட்டு 8 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாக்கு பதிவு விபரம் வருமாறு:-

திருவண்ணாமலை, ஆரணி 75 சதவிகிதம் கடலூர் நெய்வேலி 84.3 சதவிதம் தங்காவூர் திருவிடைமருதூர் 87.2 சதவிகிதம், தேனி-போடி நாயக்கனூர் 80.8 சதவிகிதம் நெல்லை சங்கரன்கோவில் 93.2 சதவிகிதம் கன்னியாகுமரி- கிள்ளியூர் 70.2 சதவிகிதம் மற்ற இரண்டு வாக்கு சாவடிகளில் முறையே 8.28 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த பதிவு 81.3 சதவிகிதம்.இவ்வாறு தலைமை தேர்தல் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்