முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் - 113 பேர் பலி

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப். 21 - சீனாவின் தென் மேற்கு பகுதியான சிட்சுவான் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி கிட்டத்தட்ட 113 பேர் பலியாகி விட்டதாகவும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து விட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்த பயங்கர நிலநடுக்கம் நேற்று காலை 8.02 மணிக்கு ஏற்பட்டது. கடந்த 2008 ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சிக்கி 87 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். அப்போது இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அப்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 53 மைல் தொலைவில் உள்ள யான் நகரத்தில் தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 90 சதவீத வீடுகள் நாசமானதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். 

எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் பற்றி சீனாவில் வெளிவரும் மாலை பத்திரிகை ஒன்று கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் 600 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 135 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இடிந்து போன கட்டிடங்களில் இருந்து 27 பேர் காப்பாற்றப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் குறித்து கேள்விப்பட்டதும் சீன பிரதமர் லீக் கியாங் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டு சம்பவம் நடந்த சிட்சுவான் பகுதிக்கு விரைந்தனர். 

மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். ஹெலிகாப்டர் மூலம் சம்பவ பகுதிக்கு விரைந்த சீன பிரதமர் மருத்துவமனைக்கு சென்று அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறியதாக சிட்சுவான் மீடியா தெரிவித்தது. நேற்று ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் பயங்கர நாசத்தை ஏற்படுத்தி விட்டதாக விஞ்ஞானிகள் கவலையுடன் தெரிவித்தனர். 

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த கட்டிடங்களில் ஏராளமானோர் சிக்கி கொண்டார்கள். சிலர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கவலையோடு தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார். சம்பவம் நடந்த பகுதிக்கு 7,400 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், ஆயுதமேந்திய போலீசாரும் விரைந்து சென்றனர். 2 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 1,400 மீட்பு பணியாளர்கள் மற்றும் 180 டாக்டர்களும் நிலநடுக்க பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 6 தேடுதல் வேட்டை நாய்களும், 120 மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 80 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்வைகள், தண்ணீர், உணவு, மருந்துகள் மற்றும் கூடாரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 1900 ம் ஆண்டில் இருந்து சீனாவில் இதுவரை 12 முறை பூகம்பங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பம்தான் மிக கொடுமையான பூகம்பமாகும். அப்போது கிட்டத்தட்ட 87 ஆயிரம் பேர் பூகம்பத்திற்கு பலியானார்கள். பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து நாசமாயின. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அப்போது உயிரிழந்தார்கள். இந்த பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சீன அதிபர் ஜிம்பிங் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி மீட்பு பணிகள் குறித்து விவாதித்தார். நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள செங்கூடு பகுதியிலும் கட்டிடங்கள் ஆடியதால் வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டிலும் இதே போல் பூகம்பம் தாக்கியது. அந்த பூகம்பத்தில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்தார்கள். நேற்று சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 113 பேர் வரை உயிரிழந்து விட்டனர். அடிக்கடி ஏற்படும் இந்த பூகம்பத்தால் சீன மக்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்