சரப்ஜித்சிங் உடல் சொந்த ஊரில் தகனம்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ், மே. 4 - சரப்ஜித்சிங்கின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ. ஒரு கோடியும் மத்திய அரசு ரூ.25 லட்சமும் நிதி உதவி அளித்துள்ளது. பஞ்சாபில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித் சிங் உடல் நேற்று முன்தினம் மாலை லாகூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூரில் இருந்து இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் நகருக்கு  கொண்டு வரப்பட்டது. சரப்ஜித் சிங்கை உடலை பெற்றுக்கொள்ள அங்குள்ள ராஜசன்சி விமான நிலையத்துக்கு பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் யாதவ், அமைச்சர்கள், மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் ப்ரநீத் கெளர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அங்கிருந்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்த பின்னர் அவரது சொந்த கிராமமான பிகிவிண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுர்,மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வால்,தேசிய சிறுபான்மை கமிஷன் துணைத்தலைவர் ராஜ் குமார் வெர்கா, பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா தலைவர் கமல் சர்மா மற்றும் சிரோண்மணி அகாலிதளம், பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது ஊடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக  எடுத்தச்செல்லப்பட்டு அவரது உடலுக்கு காவல் துறையினர் துப்பாக்கியை தலைகீழாக பிடித்து  மரியாதை செலுத்தினர். பின்னர் வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். அதனையடுத்து சரப்ஜித் சிங் உடலுக்கு மனைவி சுஹ்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வபன்தீப்,பூணம், மருமகன் சஞ்சய் ஆகியோர் முன்னிலையில் மூத்த சகோதரி தல்பீர் கவுர் சிதைக்கு தீ மூட்டினர். கவுருக்கு சிரோண்மனி அகாலிதளம் கட்சி எம்.எல்.ஏ.வீர்சா சிங் வல்டோஹா அருகில் இருந்து உதவிகளை செய்தார். சிதைக்கு தீ மூட்டுவதற்கு முன்பு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கை பார்க்க மக்கள் தெருக்களில் ஏராளமானோர் கூடியிருந்தனர். வீடுகள் மற்றும் மரங்களில் ஏறியும் பலர் பார்த்து கண்ணீர் மல்கினர். 

   பஞ்சாப் மாநில அரசு சரப்ஜித் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி அறிவித்ததுடன் மூன்று நாள் அரசு முறைத் துக்கம் அனுஷ்டிக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு மத்திய அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சரப்ஜித்சிங்கிற்கு சுப்ரீத்கவுர் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவரது மகள்கள் இருவருக்கும் உரிய அரசு வேலை கொடுக்கப்படும் என்று பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். இவர்களில் மூத்தவரான சுபபந்த்கவுருக்கு ஜலந்தரை சேர்ந்த சஞ்சய் என்ற வாலிபருடன் திருமணமாகி விட்டது. இளையவரான பூணத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. சரப்ஜித்சிங்கை மீட்க நடந்த எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் அவர் குடும்பத்தினர் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர் திடீரென கொல்லப்பட்டு விட்டார். அஜ்மல் கசாப், அப்சல்குரு ஆகிய இருவரையும் இந்தியா தூக்கில் போட்டதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் உளவுதுறையான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு சரப்ஜித்சிங்கை கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: