ரெய்னா அதிரடி: இறுதிச் சுற்றில் சூப்பர் கிங்ஸ்

புதன்கிழமை, 22 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே.23 - மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதன் மூலம் கடைசியாக நடைபெற்ற நான்கு ஐபிஎல் போட்டிகளிலும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றது. ஒட்டுமொத்தமாக, 5-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் இரு முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 18.9 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

மும்பை அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அணியில் வேயன் ஸ்மித், மிச்சல் ஜான்சன், முனப்படேல், பிரக்யான், ஓஜா ஆகியோர் களமிறக்கப்பட்டனர். அதே சமயம் சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டார்.

ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக ஆரம்பித்தார் சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸி. இதைத் தொடர்ந்து மேக் ஹஸியும், முரளி விஜயும், அதிரடியாக விளையாடினர்.அணியின் ஸ்கோர் 52 ஆக உயர்ந்தபோது, 23 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய்  ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி மும்பை வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் சேர்த்தது. குறிப்பாக மைக் ஹஸி, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர், மளமளவென உயர்ந்தது. மறுபுறம் அதிரடி ஆட்டத்தினால் ரெய்னா 23 

பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகம் காட்டிய ரெய்னா, பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தார். இதனால் 16.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 150 ஐ கடந்தது. இறுதி வரை மும்பை வீரர்களால் 2-வது விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை.  

ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சுரேஷ் ரெய்னா, 42 பந்துகளில் 82 ரன்கள், 95 (சிக்ஸர்,  5 பவுண்டரி) ஹசி 58 பந்துகளில் 86ரன்கள் எடுத்தனர். மும்பை அணித் தரப்பில் போலார்ட்  விக்கெட்டை கைப்பற்றினார். 

193 ரன்களை இலக்காக கொண்டு கள மிறங்கிய மும்பை அணியில் வேயன் ஸ்மித்தும், ஆதித்யா தாரேயும், களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 12 ஆக உயந்தபோது, 7 ரன்கள் எடுத்திருந்த தாரே,மோர்கல், பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இதனிடையே சிறிது நேரம் மெதுவாக ஆடிய ஸ்மித்

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியால் ரசிகர்கள் குதுகலம் அடைந்தனர். அவர் 21 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகமாக விளையாடிய அவர் 68 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்கு வீச்சில் ஆட்டமிழந்தார்.

28 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசினார். ஸ்மித் ஆட்டமிழந்த பிறகு மும்பை அணி வீரர் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர்.போலார்ட் மட்டும் 24 ரன்கள் எடுத்தார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 18 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும், இழந்து மும்பை தோற்றது.இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிச் சுற்றில் அடி எடுத்து வைத்தது சூப்பர் கிங்ஸ். எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் மும்பை அணி மீண்டும் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் கிங்ஸ் தரப்பில் பிராவோ, ஜடேஜா, ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொகித் சர்மா 2 விக்கெட்டையும் மோர்கல், மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்த சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர்  மைக் ஹஸி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹஸி 86 ரன்கள் எடுத்தார். இதனால் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், ஆல் ரவுண்டர் பிராவோவும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இந்த ஐபிஎல் ஆட்டத்தில் 28 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள், அதிக ரன்கள் என இரண்டிலுமே சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: